மேற்கு வங்கத்தில் .. பெண் டாக்டர் கொடூர கொலை.. நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்!
டெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை (ஆகஸ்ட் -17) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார் 2ம் ஆண்டு பயிற்சி மருத்துவர். ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவர் கடந்த 9ம் தேதி கல்லூரி கருத்தரங்கு அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் கொந்தளிப்பு:
போலீசார் செய்த விசாரணையில், பணியில் உடன் இருந்த மருத்துவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான இந்த பாலியல் பலாத்கார, கொலைச் சம்பவத்திற்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதிலும் பல இடங்களில் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
போராட்டத்தில் வெடித்த வன்முறை:
மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்டதற்கு கொல்கத்தாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சம்பவம் நடந்த மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறையால் விசாரணை, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதி மன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 மணி நேரம் போராட்டம் அறிவிப்பு
இந்நிலையில், மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் எனப்படும் ஐஎம்ஏ நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் தொடரும் என்றும், மற்ற அனைத்து சேவைகளையும் மருத்துவர்கள் புறக்கணிப்பார்கள் என அறிவித்துள்ளது.
மருத்துவ சங்க அறிக்கை:
இது குறித்து மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த கொடூர குற்ற சம்பவம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர சேவைகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள் ஆனால், வழக்கமாக வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செயல்படாது. நவீன மருத்துவ துறையில் வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவ சங்கம் கோருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்