திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?

Manjula Devi
Jan 21, 2025,07:06 PM IST


சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இசைஞானி இளையராஜா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் இவரின்  இசை தனி சகாப்தத்தை உருவாக்கியது.


இளையராஜாவின் பாடல்களுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அதாவது நாட்டுப் புறப்பாடல்களில் மெல்லிசையைப் புகுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதேபோல்  மேற்கத்திய கிளாசிக்கல், இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என அனைத்து இசைகளையும் சினிமா பாடல்களில் பயன்படுத்தி எளிய மக்களிடமும் அதை சரளமாக கொண்டு சென்று வெற்றி கண்டவர். இன்றுவரை மனம் அமைதி பெற வேண்டும் என்றால் ராஜாவின் இசைகளை கேட்டால்தான் நன்றாக இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் ஏகோபித்த கருத்து. அந்த அளவிற்கு இவரின் இசை மழையில் மக்கள் இன்னும் நனைந்து வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.




இசைஞானி இளையராஜா தற்போது படங்களில் இசையமைப்பது குறைந்துவிட்டது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய  வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் சமீப காலமாக தமிழ்நாட்டிலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்கள் மனங்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வரிசையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கடந்த ஜனவரி 17ஆம் தேதி திருநெல்வேலியில் மிகப்பிரமாண்ட இசை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இளையராஜாவின் இசை மழையில் நனைந்து உற்சாகமடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை உற்சாகப்படுத்தியது. இதனால் ஒவ்வொரு ஊர்களிலும் விரைவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவேன் என பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அடுத்த எந்த ஊரில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 


அடுத்து எங்கு இசை நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக அப்டேட்டை  வெளியிட்டுள்ளார் இளையராஜா. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், 

திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சேலம், வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார். இதனால் இந்த மாவட்டங்களில் எப்போது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 


அதே சமயத்தில் மார்ச் 8ஆம் தேதி, இளையராஜாவின் இசைக்கச்சேரி லண்டனில் நடைபெற உள்ளது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்