"அன்பு மகளே"... பவதாரணி மரணத்திற்கு பிறகு இளையராஜா போட்ட முதல் ட்வீட்!

Meenakshi
Jan 27, 2024,06:49 PM IST

சென்னை: அன்பு மகளே... மகள் பவதாரிணி மரணத்திற்கு பிறகு உருக்கத்துடன் இளையராஜா போட்ட முதல் ட்வீட் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பலரும் சோஷியல் மீடியாவில் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.


மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட இளையராஜா மகள் இழந்த சோகம் தாங்க முடியாமல் அன்பு மகளே என்று உருக்கமாக ஒரு டிவீட் போட்டு, ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளார். அந்த ஒரு வார்த்தையில் அவர் மனத்தில் இருக்கும் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி  கடந்த 25ம் தேதி  மாலை காலமானார். அவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.




குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் மிகப் பெரிய ஹிட்டாகியது. பலரது இசையில் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பின்னணி பாடியுள்ளார்.  இளையராஜா இசையில் பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.


தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை ,விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில்  மெர்க்குரி பூவே, அஞ்சலி படத்தில் வரும்  மொட்ட மாடி மொட்ட மாடி, காதலுக்கு மரியாதை படத்தில் என்னைத் தாலாட்ட வருவாளா, ஓ பேபி பேபி, நேருக்கு நேர் படத்தில் துடிக்கிற காதல் உள்ளிட்ட பாடல்களை பாடி தனக்கென்று ரசிகர் மத்தியில் ஒரு இடத்தை பிடித்தவர்.


அவரது உடல் நேற்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு பவதாரிணி  உடல் கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் இளையராஜா பங்களா இருக்கும் லோயர்கேம்ப் பங்களாவிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இளையராஜாவின் தாய் மற்றும் அவரது மனைவி  ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே பவதாரிணி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.