திருநெல்வேலி சீமையிலே.. ஜனவரி 17ம் தேதி இளையராஜாவின் இசை மழையைக் காணும் பொங்கல்!

Su.tha Arivalagan
Dec 02, 2024,11:18 AM IST

சென்னை: ஒட்டுமொத்த நெல்லைச் சீமையும் இசைப் பெருவிழா ஒன்றைக் காண இப்போதே குதூகலமாக தயாராகி வருகிறது. ஆமாங்க ஆமா.. இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சியை ஜனவரி 17ம் தேதி அங்கு நடத்தவுள்ளார். 


ஜனவரி மாதம் என்றாலே உலகத் தமிழர்களுக்கு உற்சாகம் தரும் மாதம். குடும்பம் குடும்பமாக அந்த மாதத்துக்காக காத்திருப்பார்கள். காரணம், பொங்கல் திருவிழா வரும் மாதம் அல்லவா.. ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோலாகலமாக இருக்கும் பொங்கல் விழா.




14ம் தேதி போகி, 15ம் தேதி தைப் பொங்கல், 16ம் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என்று மக்கள் உற்சாகமாகக் கொண்டாடிக் களிப்பார்கள். வழக்கமாக தைப் பொங்கல் சமயத்தில்தான் அதிக அளவிலான விடுமுறை கிடைக்கும் என்பதால் குடும்பம் குடும்பமாக இதைக் கொண்டாடி மகிழ்வது மக்களின் வழக்கம்.


இந்த நிலையில் நெல்லை மக்களுக்கு இந்த ஆண்டு காணும் பொங்கல்.. இசைஞானியைக் காணும் பொங்கலாக மலரப் போகிறது. ஜனவரி 17ம் தனது பிரமாண்ட இசைக் கச்சேரியை நெல்லையில் நடத்தப் போகிறார் இளையராஜா. பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அருகே அண்ணாமலை நகரில் இந்த இசை விழா நடைபெறவுள்ளது.


இதுதொடர்பாக இளையராஜாவே  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நெல்லையில் எனது ரசிகர்களைக் காண எனது இசைக் குழுவுடன், பாடகர்களுடன் நான் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம்தான் கும்பகோணத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. அப்போது பெரிய மழை பெய்த போதிலும் கூட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது இளையராஜாவை நெகிழ வைத்து விட்டது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் என்று கூறியிருந்தார்.


அந்த வகையில் தற்போது நெல்லை சீமையை மகிழ வைக்க வருகிறார் இசைஞானி இளையராஜா. என்ன மக்கா.. இசை மழையில் நனையத் தயாரா??



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்