சான்ஸ் கம்மிதான்.. ஒரு வேளை .. மத்தியில் ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி முயன்றால்.. யார் பிரதமர் ?

Su.tha Arivalagan
Jun 04, 2024,09:55 PM IST

டெல்லி : லாஜிக்படி பார்த்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டது. அவர்களால் நிச்சயம் ஈஸியாக ஆட்சியமைக்க முடியும். ஆனால் இந்தியா கூட்டணி முயன்றால், அதைத் தடுக்கவும் முடியும். அதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்குமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவும் எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய அறிவிக்கப்பட்டு விட்டன. இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின் படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


2019ம் லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை பாஜக கூட்டணி 16 இடங்களை இழந்துள்ளது. அதே சமயம், இந்தியா கூட்டணி 155 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்ற கட்சிகளும் 2 இடங்களை கூடுதலாக கைப்பற்றி உள்ளன. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி தான் 292 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் பாஜக மட்டும் பெற்ற சீட்கள் 239 மட்டுமே. 441 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக., 239 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக.,வின் ஸ்மிருதி இராணி, அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.




எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த 2 முறையும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன்தான் ஆட்சி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக., மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பதும், அடுத்த 5 ஆண்டுகள் பிரச்சனை இல்லாமல் ஆட்சி நடத்துவதும் கூட்டணி கட்சிகளின் கையில் தான் உள்ளது. குறிப்பாக 16 எம்பி.,க்களை பெற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், 12 எம்பி.,க்களை பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தான் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


இவர்களில் யாராவது ஒருவர் பாஜக.,விற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் கூட பாஜக.,வால் ஆட்சி அமைக்க முடியாது. இத்தகைய நெருக்கடியான நிலையில் பாஜக உள்ளதால் இந்தியா கூட்டணிக்கும் தற்போது மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கேட்டபோது அதற்கு ராகுல் காந்தி, கார்கே ஒப்புதலுடன் பதிலளிக்கையில், இதுகுறித்து நாளை டெல்லியில் நடைபெறும் எங்களது தலைவர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் என்றார். 


அவரது இந்த பதில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரின் ஆதரவை கோர இந்தியா கூட்டணி முயன்றால், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம். மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமாரோ, சந்திரபாபு நாயுடுவோ, 16 எம்பி.,க்களை வைத்திருக்கும் மற்ற கட்சிகளோ போய் சேர்ந்தால் இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் கிடைத்து விடும். ஒருவேளை அப்படி நடந்தால் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமராக யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 


இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?




கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது, நித்ய கண்டமும் பூர்ண ஆயுளுடனும் இருக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக ராகுல் காந்தி, பிரதமர் பதவியை ஏற்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அவரும் கண்டிப்பாக ஆர்வம் காட்ட மாட்டார்.


மற்றொரு புறம் தன்னுடைய ஆதரவால் மத்தியில் ஆட்சி அமைந்தால் நிச்சயமாக நிதிஷ்குமார் பிரதமர் பதவியை கேட்க வாய்ப்புள்ளது. அந்தப் பதவி தொடர்பாக ஏற்பட்ட பூசலால்தான் அவர் கூட்டணியை விட்டு வெளியேறினார். பதவி கொடுப்பதாக கூறினால் கட்டாயம் திரும்பி வர வாய்ப்புள்ளது. ஆனால் அவரை அனைவரும் பிரதமராக ஏற்பார்களாக என்பது சந்தேகம் தான்.


குறிப்பாக 37 எம்பி.,க்களை பெற்றுள்ள சமாஜ்வாதியும், 29 எம்பிக்களை வைத்துள்ள திரிணாமுல் காங்கிரசும், 22 எம்பி.,க்கள் வைத்துள்ள திமுக.,வும் ஏற்பார்களா என்று தெரியவில்லை. இந்த சூழலில் அதிக எம்பி.,க்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த உறுப்பினர்கள் யாராவதோ அல்லது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவோ பிரதமராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்படலாம்.


இதெல்லாம் வெறும் ஊகம்தான்.. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் நிதீஷ் குமாரும், நாயுடுவும், பவன் கல்யாணும் இந்தியா கூட்டணிக்கு முதலில் வர வேண்டும். அதன் பிறகுதான் இதற்கெல்லாம் வாய்ப்புண்டு என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.