அதிமுக கூட்டணி வேண்டாம்.. தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்.. அண்ணாமலை அதிரடி

Su.tha Arivalagan
Mar 18, 2023,09:54 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற்று, கட்சியை வளர்க்க முடியும். எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும் முடியும். மாறாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தால் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் பாஜக தற்போது அண்ணாமலை தலைமையில் செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையின் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே அதி வேகமாகவே இருந்து வருகின்றன. இது கட்சிக்குள்ளும் , கட்சிக்கு வெளியிலும் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


அவரது பேச்சும், செயல்பாடுகளும் பலரை முகம் சுளிக்க வைப்பதாக புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றன. சொந்தக் கட்சியினரையே அவர் வேவு பார்க்கிறார், அவர்களது தனிப்பட்ட செயல்பாடுகளை ஆடியோவில் பதிவு செய்து கட்டம் கட்டுகிறார். வீடியோ எடுத்து அவர்களது இமேஜை டேமேஜ் செய்கிறார் என்றெல்லாம் புகார்கள் உள்ளன. அண்ணாமலையின் "வார் ரூம்" செயல்பாடுகளும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியும் வருகிறது.




இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக தலைமையுடன் அண்ணாமலைக்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவர் பேசியதை அதிமுகவினர் ரசிக்கவில்லை. பகிரங்கமாகவே அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். வாய்க்கொழுப்பை அடக்குவோம், வாயடக்கம் தேவை என்றெல்லாம் அதிமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.


ஆனால் தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் அண்ணாமலை பதிலளிக்கையில்,நான் இப்படித்தான் இருப்பேன். இந்தப் பதவியில் இப்படித்தான் இருந்தாக வேண்டும். நான் இட்லி  தோசை சுட வரவில்லை. கட்சியை வளர்க்க வந்திருக்கிறேன். எனவே இப்படித்தான் இருப்பேன் என்று ஓப்பனாக கூறி விட்டார்.


இந்த நிலையில் சென்னையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடந்தது. அப்போது அதிமுக கூட்டணி தேவையில்லை என்று  அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.  அண்ணாமலை பேசுகையில் தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டுமானால் தனித்துப் போட்டியிட்டால்தான் அது சாத்தியமாகும். மாறாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி வளராது. நானும் அதை ஏற்க மாட்டேன். ஒரு வேளை கட்சித் தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தால் நான் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தொண்டர்களோடு தொண்டனாக இருந்து கட்சிப்பணி செய்வேன் என்று கூறியுள்ளார்.


அவரது கருத்துக்கு கூட்டத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியதாம். வானதி சீனிவாசன் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தைக் கூறியதாக தெரிகிறது. அண்ணாமலை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கூட்டத்தில் மாறி மாறி கருத்துக்களைத�� தெரிவித்ததால்  சிறிது நேரம் சலசலப்பாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.


அண்ணாமலை அதிமுகவின் இரு பிரிவு தலைவர்களுடனும் நெருக்கமாகவே இருந்து வந்தார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் அவர் தொடர்ந்து தீவிரமாக ஆதரவாக இருந்து வந்தார். அதேசமயம் ஓபிஎஸ் தரப்பையும் அவர் விட்டுத் தரவில்லை. ஆனால் சமீப காலமாக அண்ணாமலைக்கும், எடப்பாடிக்கும் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது. அண்ணாமலையை முதலில் மாற்றுங்கள் என்று பாஜக தலைவர்களிடம் எடப்பாடி கூறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் திடீரென ஓ.பி.எஸ்ஸை சந்தித்து பேசினார் அண்ணாமலை. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்று அவர் கூறியிருப்பதும், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் சொல்லியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.