15 வயது சிறுவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற.. ஐஸ்லாந்து பெண் அமைச்சர் ராஜினாமா

Su.tha Arivalagan
Mar 22, 2025,04:34 PM IST

ரெய்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டு பெண் அமைச்சர் அஸ்தில்தர் லோவா தோர்ஸ்டாட்டிர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


58 வயதாகும் தோர்ஸ்டாட்டிர், அவருக்கு 22 வயது இருந்தபோது, 15 வயது சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்தே தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் தோர்ஸ்டாட்டிர். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போது அவர் பதவி விலகியிருக்கிறார்.


அந்த சமயத்தில் தோர்ஸ்டாட்டிர் மத அமைப்பில் கவுன்சலராக இடம் பெற்றிருந்தார். அந்த அமைப்புக்கு இந்த சிறுவன் வந்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்குள் உறவு ஏற்பட்டுள்ளது. ஐஸ்லாந்து சட்டப்படி மைனர் சிறுவனுடன் உறவு கொள்வது குற்றச் செயலாகும். அதாவது 18 வயதுக்கு உட்பட்டோருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. இதுபோல செயல்பட்டு பிடிபட்டால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.




தோர்ஸ்டாட்டிருக்கும், அந்த சிறுவனுக்கும் உறவு ஏற்பட்ட நிலையில், சிறுவனுக்கு 16 வயதும், தோர்ஸ்டாட்டிருக்கு 23 வயதும் இருக்கும்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அது ஆண் குழந்தையாகும்.  தோர்ஸ்டாட்டிர்  உறவு வைத்திருந்த நபரின் பெயர் அஸ்மன்ட்சன். குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை தோர்ஸ்டாட்டிர்  - அஸ்மன்ட்சன் இடையே நல்ல நட்பும், உறவும் நீடித்துள்ளது. ஆனால் ஒரு ஆண்டு கழிந்த நிலையில் தனது வருங்கால கணவரை சந்தித்தார் தோர்ஸ்டாட்டிர். அவர்களுக்குள் காதல் மலரவே, அஸ்மன்ட்சனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார் தோர்ஸ்டாட்டிர் . மேலும் மகனையும் கூட அவரிடம் காட்ட மறுத்து விட்டார்.


இருப்பினும் தனது மகனுக்குத் தேவையானதை கிட்டத்தட்ட 18 வருட காலம் செய்து வந்துள்ளார் அஸ்மன்ட்சன். இந்த நிலையில் தனது மகனை சந்திக்க அவர் தீவிரமாக முயன்றுள்ளார். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. இதையடுத்து அஸ்மன்ட்சனின் உறவினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து பிரச்சினையைக் கிளப்ப முடிவு செய்தனர். இதையடுத்தே தனது தவறை ஒத்துக் கொண்டு பதவி விலகியுள்ளார் தோர்ஸ்டாட்டிர் .