14 மணி நேரத்தில் 800 நில நடுக்கங்கள்.. ஆடிப் போன ஐஸ்லாந்து.. அவசர நிலை பிரகடனம்!

Su.tha Arivalagan
Nov 11, 2023,05:52 PM IST
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் அடுத்தடுத்து 800 நில நடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  இதில் மிகப் பெரிதாக கிரின்டிவாக் வடக்கே ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தென் மேற்கு ரெய்க்ஜான்ஸ் தீபகற்பப் பகுதியில் இந்த தொடர் நிலநடுக்கங்கள் உலுக்கி எடுத்து விட்டன. மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள்.  அப்பகுதியில் உள்ள ஒரு எரிமலை வெடிக்கத் தயார் நிலையில் உள்ளது. இதன் எதிரொலியாகவே இத்தனை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டில் அவசர நிலையை காவல்துறை பிரகடனம் செய்துள்ளது. கிரின்டிவாக் வடக்கில் உள்ள சுன்ந்த்ஜுகாகிகார் என்ற பகுதிதான் அதிக அளவிலான நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. 



எரிமலை வெடிக்கும் வரை நிலநடுக்கங்கள் தொடரும், இதை விட பெரிதாகவும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எரிமலை வெடிக்கும் நிகழ்வு பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிரின்டிவாக் கிராமத்தில் கிட்டத்தட்ட 4000 பேர் வசிக்கிறார்கள்.  தொடர் நிலநடுக்கம் நடந்த பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்குள்ள மக்களை வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இரண்டு நில நடுக்கங்கள் தலைநகர் ரெய்க்ஜாவிக் வரை உணரப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை இங்கு கிட்டத்தட்ட 24,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்து விட்டனர்.

ஐரோப்பி நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நிறைய எரிமலைகள் உள்ளன. தற்போது அங்கு ஆக்டிவான நிலையில் 33 எரிமலைகள் உள்ளன.  ஐரோப்பாவிலேயே அதிக அளவிலான எரிமலைகள் ஐஸ்லாந்தில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.