சென்னையிலே தோத்ததே இல்லை பாகிஸ்தான்.. எப்படிப்பட்ட வரலாறு.. நொறுக்கிருச்சே ஆப்கானிஸ்தான்!
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகளில் இதுவரை தோல்வியே கண்டிராத அணி என்ற பெருமையை வைத்திருந்த பாகிஸ்தான் முதல் முறையாக அங்கு தோல்வியைத் தழுவியுள்ளது. அதுவும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றுப் போய் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எப்போதுமே சாதகமானது. லட்டு போல இங்கு அது விளையாடும், ஜெயிக்கும். இந்த மைதானத்தில் இதுவரை பாகிஸ்தான் விளையாடிய எந்தப் போட்டியிலும் அது தோற்றதே இல்லை. இந்தியா உள்பட யாருடன் மோதிய போதிலும் சரி, பாகிஸ்தான் தான் வென்றுள்ளது.
1997ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 2 ஒரு நாள் போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியுள்ளது பாகிஸ்தான். இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
அதிலும் 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர் அதிரடி பேயாட்டம் ஆடி 194 ரந்களைக் குவித்து மிரட்டி விட்டார். இந்தப் போட்டி இந்தியாவுக்கு எதிரானது. அதேபோல 2012ம் ஆண்டு நடந்த போட்டியிலும் பாகிஸ்தான் சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தது.
அதன் பிறகு 3வது முறையாக பாகிஸ்தான் இன்று ஆப்கானிஸ்தானை சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்னையில் விளையாடியது. ஆனால் இன்று பாகிஸ்தான் விளையாடிய விதம் சென்னை ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. எல்லாவற்றிலுமே பாகிஸ்தான் அணி சறுக்கலையே சந்தித்தது.
ஆரம்பத்திலிருந்தே ஆப்கானிஸ்தான் கையே ஓங்கியிருந்தது. சிறப்பான பந்து வீச்சு, அருமையான பீல்டிங், ஒருங்கிணைந்து ஆடிய விதம், சரியான டிஆர்எஸ் முடிவுகளை கோரியது என அசத்தி விட்டது ஆப்கானிஸ்தான். அதேபோல பேட்டிங்கிலும் மிகுந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தியது ஆப்கானிஸ்தான். அருமையான பார்ட்னர்ஷிப்களைப் போட்டு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நிலை குலைய வைத்தனர்.
ஆப்கானிஸ்தானை எளிதாக நினைக்க முடியாது என்பதை இந்த அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் 2வது முறையாக நிரூபித்துள்ளது. முதலில் இங்கிலாந்து அணியை நையப்புடைத்தது. இப்போது பாகிஸ்தானை பந்தாடியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இங்கு இதுவரை 2 முறை விளையாடியுள்ளது. இதில் ஒருமுறை தோற்று, இன்று வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. மறுபக்கம், இதுவரை தோல்வியே காணாத மைதானத்தில் முதல் முறையாக தோல்வி கண்டு வேதனையை சந்தித்துள்ளது பாகிஸ்தான்.