ICC Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு போய் விளையாட வாய்ப்பில்லை.. இந்திய அணி முடிவு!
மும்பை: 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானில் போட்டிகளில் கலந்த கொள்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியா தொடர்புடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறும் அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைக்கவுள்ளது.
2017ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது ஐசிசி. 2025ம் பிப்ரவரி - மார்ச் மாதம் இந்தப் போட்டித் தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதில்லை என்பதால் அங்கு நடைபெறும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்து கடிதம் எழுத இ்நதிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு காரணமாக, போட்டியை பாகிஸ்தான் மற்றும் வேறு ஒரு நாட்டில் நடத்த ஐசிசியும் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கால அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் சமர்ப்பித்தது. அதில் இந்தியா தொடர்பான போட்டிகளை லாகூரில் நடத்த திட்டமிட்டிருப்பாதக அது தெரிவித்திருந்தது. அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இருப்பினும் பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற முடிவில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுறுவ விட்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடுவதால் பாகிஸ்தானில் நடைபெறும் எந்த வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்பதில்லை. குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. நீண்ட காலமாக இந்த முடிவை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் ஏதாவது சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தினால் இந்தியாவுக்கு வசதிாக நியூட்ரல் மைதானங்களில்தான் இந்தியா தொடர்புடைய போட்டிகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.