2026 சட்டசபைத் தேர்தல் வரட்டும்.. நான் யார் என்பதை காட்டுகிறேன்.. சசிகலா மீண்டும் சவால்!
சென்னை: மீண்டும் ஒரு சவால் விட்டுள்ளார் சசிகலா. 2026 சட்டசபைத் தேர்தலின் போது நான் யார் என்பதைக் காட்டுவேன் என்று அவர் கூறியுள்ளா்.
மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக யார் என்பது அனைவருக்கும் தெரிய வரும். 2026 சட்டசபை தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவும் - திமுகவும்தான் நேரடியாக போட்டியிடும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட திட்டங்கள் போட்டார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இவர் செய்த ஒரே காரியம், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது மட்டுமே. அதன் பின்னர் சிறைக்குப் போய் விட்டார். சிறைக்குப் போவதற்கு முன்பு ஜெயலலிதா சமாதியில் 3 முறை ஆவேசமாக அடித்து சத்தியம் செய்து விட்டுப் போனார்.
சிறையிலிருந்து திரும்பி வந்ததும் புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையிலிருந்து வந்த பிறகு பல்வேறு கோவில்களுக்குப் போனாரே தவிர வேறு எதையுமே செய்யவில்லை. அரசியலை விட்டே ஒதுங்கிப் போய் விட்டார். அதன் பின்னர் டிடிவி தினகரன் அமமுகவை நடத்த ஆரம்பித்தார். ஓ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கப்பட்டு இப்போது அடையாளங்களையும் இழந்து நிற்கிறார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் சசிகலா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக யார் என்பது தெரியும். அதிமுகவில் பிரிந்து கிடைக்கும் அனைத்து அணிகளும் ஒருங்கிணையும்.
2026 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே நேரடி போட்டி இருக்கும். நாங்கள் யார் என்பதை அப்போது காட்டுவோம். திமுக என்ன ஆகும் என்பது எனக்கு மட்டுமே தெரியும். மக்கள் வாக்களிக்கும் போது தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம், மத்தியில் யாருக்கு ஆட்சியை தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும். அதுவே சிறந்ததாக இருக்க முடியும்.
அதிமுகவில் தற்போது நடந்து வருவது பங்காளி சண்டை. ஓபிஎஸ்ஸாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள் தான். இப்போது நடப்பது பிரச்சனை அல்ல வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும். ஆட்சியையும் பிடிக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார் சசிகலா.
இதேபோலத்தான் தொடர்ந்து பேசி வருகிறார் சசிகலா. நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக ஒருங்கிணைந்து சந்திக்கும் என்று முன்பு கூறியிருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தினகரனும், ஓபிஎஸ்ஸும் பாஜக பக்கம் போய் விட்டனர். இப்போது 2026 தேர்தல் வரட்டும் என்று கூறியுள்ளார் சசிகலா.. பார்க்கலாம் அப்போது என்ன நடக்கும் என்பதை.