நான் அதிபர் தேர்தலில் ஜெயித்தால்.. எலான் மஸ்க்குக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன.. டொனால்ட் டிரம்ப்!

Su.tha Arivalagan
Aug 20, 2024,05:32 PM IST

பென்சில்வேனியா: அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்குக்கு அமைச்சர் அல்லது ஆலோசகர் பதவியைத் தருவேன் என்று கூறியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.


முடிந்தால் அமைச்சர் பதவியே தருவேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அத்தோடு நில்லாமல், மின்சாசாதன வாகனங்கள் வாங்குவோருக்கு 7500 டாலர் கடன் உதவியும் தரப்படும் என்றும் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார். டிரம்ப்புக்கு, எலான் மஸ்க் ஆரம்பத்திலிருந்தே தீவிர ஆதரவு அளித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.


எக்ஸ் தளமானது முன்பு டிவிட்டராக இருந்தபோது, அதாவது எலான் மஸ்க் அதை வாங்குவதற்கு முன்பு அந்தத் தளத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார் டிரம்ப். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு அந்தத் தடையை நீக்கினார். அப்போது முதல் தொடர்ந்து டிரம்ப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார் மஸ்க். 




யார்க் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்குப் பின்னர் நடந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது டிரம்ப் கூறுகையில், மஸ்க் மிகவும் புத்திசாலியான மனிதர். அருமையான நபர். நிச்சயம் நான் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியோ அல்லது ஆலோசகர் பதவியோ கண்டிப்பாக தருவேன். 


எனக்கு மின்சாதன கார்கள் பிடிக்கும். அதற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறேன். கடன் உதவி அளிப்பது சவாலான செயல்தான். ஆனால் மின்சாதன வாகனங்களுக்கு கடன் உதவி அவசியம். இதுதொடர்பாக நான் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால் கொடுக்க முயற்சிப்பேன். பைடன் ஆட்சியில் மின்சாதன வாகனங்கள் தயாரிப்புக்கு போதிய ஊக்குவிப்பு தரப்படவில்லை. அதை நான் சரி செய்வேன் என்றார் டிரம்ப்.


டிக்டாக்கை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே என்று டிரம்ப்பிடம் கேட்டபோது, அது சற்று கடினமானது. சுதந்திரமான பேச்சுரிமை தொடர்பானது இது. இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை டிக்டாக் என்னிடம் மென்மையாகவே நடந்து கொண்டுள்ளது என்றார் டிரம்ப்.


சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வீடியோ செயலிதான் டிக்டாக். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவிலும் இதை தடை செய்யக் கோரிக்கை இருந்து வருகிறது. இருப்பினும் இதுவரை அமெரிக்க அரசு இதை தடை செய்யவில்லை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்