லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டி...அதிரடி காட்டும் மன்சூர் அலிகான்

Meenakshi
Jan 10, 2024,06:42 PM IST

சென்னை: தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால், அவரை  எதிர்த்து நான் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி என்று  நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். 


தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மன்சூர் அலிகான். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். சமீபத்தில் லியோ பட சக்சஸ் மீட்டில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசினார். அந்த பிரச்சனை பல வழிகளில் விஸ்வரூபம் எடுத்தது. தற்போது தான் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. இந்த நிலையில், சினிமாவை தொடர்ந்து அரசியல் களத்தில் தனது பரபரப்பை கையில் எடுத்துள்ளார் மன்சூர் அலிகான்.




லோக்சபா தேர்தல் வருகின்ற மே மாதம்  நடைபெற உள்ளது. இந்நிலையில் தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிட உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார். ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். 


நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஆலமரமான, அன்பின் ஆண்டாளான, ''அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம். எவ்வளவு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி, இந்தா வர்ரேன்டா என்று  மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.