"ஜன்னலோரத்துல நின்னுட்டிருந்தாங்க.. பார்த்ததும் பிடிச்சுருச்சு".. வைகோவின் அழகிய பக்கம்!

Meenakshi
Nov 07, 2023,06:07 PM IST

சென்னை: மதிமுக நிறுவனர் வைகோ தனது மனைவியை வா போ என்று கூப்பிட மாட்டாராம். மாறாக வாங்க போங்க என்றுதான் கூப்பிடுவாராம்.. ஆச்சரியமாக இருக்கு இல்லையா.. இதை அவரே ஒரு பேட்டியில் தனது மனைவியுடன் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.


கலாட்டா மீடியாவிற்கு வைகோ தனது மனைவி ரேணுகா தேவியுடன் இணைந்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியின்போது அவர் இந்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.




தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் வை கோபால்சாமி எனப்படும் வைகோ. வை கோபால்சாமி என்று சொன்னதை விட வைகோ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். இதனாலேயே தனது பெயரை வைகோ என்றே மாற்றிக் கொண்டவர் அவர். 


அகில இந்திய அளவில் தனது பேச்சாற்றாலால் அகில இந்தியத் தலைவர்களையும் கவர்ந்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் இவரது முழக்கம் மிகப் பிரபலமானது. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாக போற்றப்பட்டவர் வைகோ.  மறைந்த பாஜக தலைவர் வாஜ்பாயின் அன்பைப் பெற்றவர். அவரால் பாராட்டப்பட்டவர். 




வைகோவை  நல்ல ஒரு அரசியல் தலைவராக, போராளியாக, பேச்சாளராக தான் நமக்கு தெரியும். ஆனால் வீட்டில் அவர் எவ்வாறு நடத்து கொள்வார் என்பதனை அவரும் அவரது மனைவியாரும் கொடுத்த பேட்டியின் மூலம் தெரிய வந்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பேட்டியின்போது, "ஐயா அம்மாவை எப்படி கூப்புடுவீங்க"னு கேட்க "அதையெல்லாம் வெளிய Open-ஆ சொல்ல முடியுமா" என்று கூறியதும் அனைவரும் அதற்கு கொள்ளென சிரிந்தார்கள். "நீ நான்னு கூட பேசினது கிடையாது. வாங்க போங்கன்னுதான் கூப்பிடுவேன் என்றார் வைகோ. எதற்காக அப்படினு கேட்டபோது, மரியாதையாக கூப்பிடணும்னு நினைச்சேன். அதான் அப்படி கூப்பிட ஆரம்பித்தேன் என்றார் வைகோ.


அவரது மனைவி ரேணுகாதேவி குறுக்கிட்டு, எதற்காகனு தெரியாது. ஆரம்பத்துல இருந்தே நீங்க நாங்கனு தான் கூப்பிடுவார் என்று சந்தோஷத்துடன் கூறினார். முதல்முறையாக ஐயாவை எங்க பார்தீங்கனு கேட்டபோது, திருமணத்திற்கு முன்னால" என்றார்.




பின்னர் வைகோவிடம், "நீங்க அம்மாவை முதல் முதல்ல பார்த்தப்ப என்ன தோனுச்சு"னு கேட்க.. அதற்கு வைகோ, நான் மூனு நாலு பெண்களை பாத்தேன். அவங்க வீடுகளுக்கு எல்லாம் போனேன். நல்ல விருந்து சாப்பிட்டேன். அவங்கள யாரையும் எனக்கு பிடிக்கல. இவங்கள பாத்த உடனே பிடிச்சு பேச்சு. சன்னல் ஓரமா நின்னாங்க. அவங்களை பார்த்தப்ப பிடிச்சுருச்சு. அப்பறம் திருமணம் நடந்தது.  என் மனைவி என் அரசியலில் தலையிட்டது இல்லை என்றார் வைகோ.


தனது சிம்மக் குரலால் நாட்டையே நடுங்க வைத்த ஒரு பெரும் தலைவர் தனது மனைவி மீது வைத்திருக்கும் மரியாதை உண்மையிலேயே கம்பீரமான பேரன்பு என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.