"எதுவும் சரியில்லை.. கவர்னரிடம் ஆட்சியைக் கலைக்கச் சொல்லிட்டேன்".. நிதீஷ்குமார்!

Su.tha Arivalagan
Jan 28, 2024,06:07 PM IST

பாட்னா: ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த நிதீஷ்குமார், தனது ஆட்சியைக் கலைக்குமாறு ஆளுநருக்குப் பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் பாஜகவுடன் மீண்டும் சேருவதற்குப்  பதில் செத்துப் போகலாம் என்று ஆவேசமாக கூறியிருந்தார் நிதீஷ் குமார். ஆனால் இந்த ஜனவரியில் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க தீர்மானித்து விட்டார்.


ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்து வந்த நிதீஷ் குமார், இப்போது அந்தப்ப பதவியை உதறி விட்டார். தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் அவர் ஆட்சியமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.




இன்று முற்பகல் ஆளுநரைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் நிதீ்ஷ் குமார் பேசுகையில், கூட்டணியில் எதுவும் சரியாக இல்லை. சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் ஆட்சியை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆளுநரைச் சந்தித்து எனது  பதவி விலகலைத் தெரிவித்து விட்டேன். ஆட்சியைக் கலைக்கவும் பரிந்துரைதுள்ளேன். மகா கூட்டணியின் ஆட்சி முடிந்து விட்டது.


நான் அனைவருடனும் ஆலோசித்த பின்னர்தான் இந்த முடிவை எடுத்தேன். அனைவரின் கருத்தையும் காது கொடுத்துக் கேட்டேன். ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்றார் நிதீஷ் குமார்.