எனக்கு உடல்நிலை சரியில்லை என்பவர்களைப் பார்த்து.. சிரிப்பு தான் வருகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Jan 12, 2024,07:14 PM IST

சென்னை: எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் உற்சாகத்துடன் இல்லை என எழுதுபவர்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்று அயலகத் தமிழர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.


தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில்  ஆண்டுதோறும், தமிழ் வெல்லும் எனும்  தலைப்பில்  அயலகத் தமிழர் தின விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம்  வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார். 


எனது கிராமம் என்கிற திட்டத்தை  அவர் அப்போது தொடங்கி வைத்தார். மாநாட்டில் கணியன் பூங்குன்றனார் பெயரில் 13 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார்.  பின்னர் முதல்வர் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வந்துருச்சு. பொங்கல் பரிசு வந்திருச்சு, பொங்கலுக்கும் ரூ.1000 வந்துருச்சு. வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வந்திருச்சு என ஒரு பெண்மணி கூறியிருக்கிறார். இது தான் எனக்கு மகிழ்ச்சி.




இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். எனக்கு உடல்நிலை சரியில்லை. உற்சாகமாக  இல்லை என  எழுதியிருந்தார்கள்.  அதை படிக்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. எனக்கு என்ன குறை. தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட எனக்கு என்ன வேண்டும். மக்களை பற்றி தான் எப்போதும் என்னுடைய நினைப்பு இருக்கும்.


என்னை பற்றி நினைத்ததில்லை. உங்கள் முகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி தான் எனக்கு உற்சாக மருந்து.  அயலகத் தமிழர்கள் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.