நான் அண்ணி மட்டுமல்ல.. தொண்டர்களுக்கு அன்னையும் கூட.. உருகிய பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதினால், அக்கட்சியின் புதிய செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உருக்கமாக அவர் பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து..
கேப்டனின் மனைவியாக என் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது பொதுச்செயலாளராக மிகப்பெரிய பொறுப்பை எனக்கு கேப்டன் கொடுத்துள்ளார். தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லை, அன்னையாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
விஜயகாந்த்துக்கு நடந்த துரோகங்கள் தான் அவர் உடல் நலன் பாதிக்க காரணம். எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, கட்சியில் யாரையெல்லாம் அவர் நம்பினாரோ அவர்கள் செய்த துரோகங்கள்தான் அவரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டன. விஜயகாந்த் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லாம் துரோகம் செய்து விட்டனர். இந்த துரோகங்கள் கொடுத்த வலியை நானும், விஜயகாந்த்தும் தாங்கிக் கொண்டோம்.
தேமுதிக யாருடனும் கூட்டணி சேராது என்பதில் கேப்டன் உறுதியாக இருந்தார். இருப்பினும் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம். அதன் பிறகு அமைந்த கூட்டணிகள் எதுவும் சரியாக அமையவில்லை. இதனால்தான் எங்களுக்குத் தோல்விகள் கிடைத்தன. கேப்டன் உடல் நலக்குறைவால் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். இருப்பினும் தேமுதிக வரும் தேர்தல்களில் நிச்சயம் பெரும் வெற்றியைப் பெற்று கேப்டனுக்கு அந்த வெற்றியை சமர்ப்பிக்கும்.
அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால். அதற்கு உதாரணம் ஜெயலலிதா. ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கு அரசியல் ரோல் மாடல். அவருடைய தைரியம் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.
தேமுதிகவைப் பொறுத்தவரை நாங்கள் எந்த சவாலையும் சந்திக்க தயார். அரசியல் இயக்கப் பணிகளில் விஜயகாந்த் உடன் தொடக்கத்தில் இருந்தே பயணித்து வருகிறேன். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் தேமுதிக வெற்றி பெறும். தொண்டர்களின் நம்பிக்கையுடன் நான் பயணத்தை தொடர்கிறேன் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.