விஜயகாந்த் நல்ல நண்பர்.. அவரது கோபத்துக்கு நான் ரசிகன்.. விடை கொடுக்கிறேன்.. கமல்ஹாசன் அஞ்சலி
சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஒருபக்கம் ரஜினிகாந்த், இன்னொரு பக்கம் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் தூண்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தபோது நடுவே தனக்கென ஒரு தனிப் பாதையை கஷ்டப்பட்டுப் போராடி போட்டுக் கொண்டு அதில் ஜம்மென்று பயணிக்க ஆரம்பித்து உச்சம் தொட்டவர் விஜயகாந்த்.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனையே மிஞ்சும் அளவுக்கு அவரது உயரம் இருந்தது. ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்து அனைவரையும் மலைக்க வைத்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் மரணத்தால் இந்த இரு பெரும் நடிகர்களும் உடைந்து போயுள்ளனர். ரஜினிகாந்த் வார்த்தையில் சொல்வதானால், விஜயகாந்த்தின் அன்புக்கு அடிமையானவர்களில் இவர்களும் இருவர்.
காலையில் ரஜினிகாந்த் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது கமல்ஹாசனும் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், உழைப்பு, எளிமை, பணிவு பெருந்தன்மை என அனைத்து வார்த்தைகளும் சகோதரர் விஜயகாந்த்துக்குத்தான் பொருந்தும்.
ஆரம்பத்தில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத போது நான் பார்த்தபோது எப்படி அவர் என்னிடம் பழகினாரோ, அதேபோலத்தான் அந்தஸ்து வந்த பிறகும் கூட என்னிடம் பழகினார்.
இவரிடம் எந்த அளவுக்கு பணிவு இருக்கோ அதே அளவுக்கு அவரிடம் நியாயமான கோபமும் இருக்கும். அதனால்தான் அவர் பொதுப் பணிக்கு வந்தாரோ என்னவோ. அவரது கோபத்துக்கு நான் பெரிய ரசிகன்.
இவர் போன்ற நேர்மையாளர்களை இழந்திருப்பது வருத்தம். இவரது நிழலில் இன்னும் பலர் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்ல நண்பருக்கு விடை கொடுத்துச் செல்கிறேன் என்றார் கமல்ஹாசன்.