சிகாகோ வீதியில்.. பசி பட்டினியுடன்.. திக்கற்ற நிலையில் தவிக்கும் இந்தியப் பெண்!
Jul 27, 2023,12:38 PM IST
- சகாயதேவி
சிகாகோ: அமெரிக்காவில் உயர் படிப்பு படிப்பதற்காக நிறைய கனவுகளுடன் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் அங்கு தனது உடமைகளை இழந்து, பசி பட்டினியில் உழன்று தெருவில் வசிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் பலருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.. என்ற கனவுகள் நிறையவே உண்டு. அதிலும், அதிகம் பேர் செல்ல ஆசைப்படும் இடம் அமெரிக்கா தான். பணி நிமித்தமாக அமெரிக்கா செல்வோரும் உண்டு. அது போல உயர்கல்வி பயில செல்லும் மக்களும் உண்டு.
அமெரிக்காவில் கல்வி கட்டணம் அதிகம் என்றாலும் கூட தரம் இருப்பதாலும், உலக அளவில் மதிப்பு இருப்பதாலும் எப்படியோ கடனை உடனை வாங்கியாவது அங்கு சென்று படிக்க ஆரம்பிக்கின்றனர். அங்கு ஏற்படும் இதர செலவுகளை சமாளிக்க, ஹோட்டல், ஸ்டோர்கள், பெட்ரோல் பம்ப் போன்ற இடங்களில் பகுதி நேர வேலையும் பார்த்து சம்பாதித்து சமாளிக்கின்றனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை கல்லூரி படிக்கும் பொழுதே கிடைக்கும் பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிப்பது அங்குள்ள மக்களுக்கு சாதாரண பழக்கம் என்பதால் நம்மவர்களும் அதைக் கடைப்பிடிக்கின்றனர். அந்தக் கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் கூட வந்து விட்டது. ஆனால் அங்கு படிப்பதற்காக போய் பெரும் சிக்கலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது பெயர் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி . டெட்ராய்டில் உள்ள TRINE பல்கலைக்கழகத்தில் தகவல் அறிவியலில் முதுகலைப் படிப்பில் படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது உடமைகள் திருட்டுப் போய் விட்டன. எல்லாவற்றையும் இழந்த அவர் தெருவோரத்தில் வசிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். மேலம் அவர் மனச்சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானார். பசி பட்டினியில் வாடிய அவரது நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் மஜ்லிஸ் பச்சாவ் தஹ்ரீக் என்ற ஆந்திர மாநில கட்சியின் செய்தித் தொடர்பாளரானஅம்ஜத் உல்லா கான்.
சிகாகோ வீதியில் வாடும் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதியின் அவலநிலையை அவர் வீடியோவாக டிவிட்டரில் பகிர்ந்தார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் உடனடி உதவிக்கும் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அந்த டிவீட்டுக்கு உடனடியாக ரியாக்ஷன் கொடுத்துள்ளது. அதில், சையதா லுலுவின் நிலை குறித்து தற்போதுதான் தெரிய வந்துள்ளது. விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள் என்று அது தெரிவித்துள்ளது.