28 வயசுதான்.. இப்படியெல்லாமா நடக்கும்?.. கல்யாணத்திற்கு ஒரு மாசம்தான்.. என்ன கொடுமை பாருங்க!

Su.tha Arivalagan
Feb 20, 2024,07:40 PM IST

ஹைதராபாத்: தெலங்கானாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது புன்னகையை மேலும் வசீகரமாக்குவதற்காக ஆபரேஷன் செய்யப் போயுள்ளார். சர்ஜரி நடந்து கொண்டிருக்கும்போது அவரது உடல் நிலை மோசமாகி மரணமடைந்து விட்டார். இவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.


இப்போது எது எதற்கெல்லாமோ அறுவைச் சிகிச்சை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உடல் அழகை பொலிவாக்குவதற்காக விதம் விதமான அறுவைச் சிகிச்சைகள் உள்ளன. பற்களின் வரிசையை சீரமைக்க முடியும்.  உதட்டழகை சரி செய்ய முடியும்.. உடம்பில் கொழுப்பு இருந்தால் அதையும் சக்ஷன் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். மூக்கை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்கிறார்கள். இப்படி உடல் முழுவதும் கத்தியை வைத்து வசீகரத்தைக் கூட்ட பலரும் இப்போது தயங்குவதில்லை.


ஆனால் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சையின்போது பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரை விடுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு வாலிபர்  தனது புன்னகையை மேலும் மெருகேற்றுவதற்காக ஆபரேஷன் செய்யப் போய் உயிரிழந்துள்ளார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.




அவரது பெயர் லட்சுமிநாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயமானது. அடுத்த மாதம் கல்யாணம் நடக்கவிருந்தது. தனது புன்னகையின் வசீகரத்தைக் கூட்ட எண்ணிய அவர் ஹைதராபாத்தில் உள்ள எப்எம்எஸ் சர்வதேச டென்டல் கிளினிக் என்ற மருத்துவமனையை நாடினார். ஒரு அறுவைச் சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்று அங்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து அவர் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூட அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அறுவைச் சிகிச்சையின்போது அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோமா நிலைக்கு அவர் போய் விட்டார். உடனடியாக அவரை வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து லட்சுமி நாராயண விஞ்சமின் தந்தை ராமுலு விஞ்சம் ஜூபிளி ஹில்ஸ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த விவகாரம் குறித்து ராமுலு கூறுகையில், மருத்துவமனையிலிருந்து எனக்கு போன் வந்தது. பதறி அடித்துக் கொண்டு நாங்கள் சென்றோம். எங்களது மகன் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். அதனால்தான் எங்களது மகன் கோமாவுக்குப் போய் உயிரிழந்திருக்கிறான். அவனுக்கு வேறு எந்த நோயும் இல்லை. நன்றாகத்தான் இருந்தான். டாக்டர்களின் அலட்சியமே எங்களது மகனின் மரணத்திற்குக் காரணம் என்று கூறினார் அவர்.


கிடைச்சதை வச்சுட்டு சந்தோஷமா இருக்கப் பாருங்க மக்களே.. இயற்கை நமக்கு என்ன கொடுத்திருக்கிறதோ.. அதுதான் நமக்கானது. அதைத் தாண்டி வேறு எதையும் மாத்த முயலாதீங்க.. அது இயற்கைக்குப் புறம்பானதாகவே இருக்கும்.