மனைவியைக் கொன்று.. குக்கரில் போட்டு சமைத்த.. குரூர குருமூர்த்தி.. ஆடிப் போன ஹைதராபாத்!

Su.tha Arivalagan
Jan 23, 2025,05:01 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தனது மனைவியைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்துள்ளான் ஒரு குரூரன். 


போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.


ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 35 வயதான வேங்கட மாதவி. இவர் ஜனவரி 16ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து மாதவியின் குடும்பத்தினர் தங்களது மகளைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாதவியின் கணவர் குருமூர்த்தி (45 வயது) மீது சந்தேகம் எழுந்துள்ளது.




இதையடுத்து குருமூர்த்தியைப் பிடித்து விசாரிக்கிற முறையில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் பதற வைக்கும் தகவல்களைக் கக்கியுள்ளார் குருமூர்த்தி. சம்பவ நாளன்று அதாவது ஜனவரி 16ம் தேதி மாதவியுடன் சண்டை போட்டுள்ளார் குருமூர்த்தி.  அதன் பிறகு மாதவியைக் காணவில்லை. தனது மனைவியின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்லியுள்ளார் குருமூர்த்தி. பதறிப் போய் ஓடி வந்த பெற்றோர் என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு மாதவி வெளியே போய் விட்டார் என்று கூறியுள்ளார் குருமூர்த்தி.


இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குருமூர்த்தியையும் கூட்டிக் கொண்டு மீர்பேட்டை காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுத்தனர். போலீஸார் குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார் குருமூர்த்தி. போலீஸாரும் மிஸ்ஸிங் கேஸ் பதிவு செய்து விசாரித்து வந்தனர். குருமூர்த்தியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களில் குழப்பம் இருப்பதை உணர்ந்த போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது.


இதையடுத்து அவரை உரிய முறையில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்களைக் கக்கியுள்ளார் குருமூர்த்தி.  


குருமூர்த்தி, மாதவி இடையே இடையே அடிக்கடி சண்டை வருமாம். சம்பவத்தன்றும் சண்டை வந்துள்ளது. வழக்கத்தை விட உக்கிரமாக இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதில் கோபம் தலைக்கேறி மனைவியைக் கொலை செய்து விட்டார் குருமூர்த்தி. அதன் பின்னர் உடலை என்ன செய்வது என்று குழம்பியுள்ளார். உடலை எரித்து விடலாம் என்று முடிவு செய்த அவர் முதலில் துண்டு துண்டாக வெட்ட முடிவு செய்து,  உடலை பாத்ரூமுக்குள் கொண்டு போய் கத்தியை எடுத்து வெட்டியுள்ளார். அதன் பின்னர் உடல் பாகங்களை குக்கரில் போட்டு சமைத்துள்ளார்.


மனைவியின் உடல் எலும்புகளை தனித் தனியாக பிரித்து அவற்றையும் தனியாக குக்கரில் போட்டு சமைத்துள்ளார். இப்படி  3 நாட்களாக மீண்டும் மீண்டும் உடல் உறுப்புகளை சமைத்துள்ளார். அதாவது எந்த வகையிலும் உடல் யார் கைக்கும் போய் தனக்கு எதிரான ஆதாரமாக மாறி விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தாராம். அதன் பின்னர் மொத்தமாக அவற்றை பேக் செய்து மீர்பேட்டை ஏரியில் கொண்டு போய் வீசி விட்டாராம்.  ஏரியில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் சமைத்த உடல் உறுப்புகளைப் போட்டுள்ளார் குருமூர்த்தி.


போலீஸார் குருமூர்த்தி கூறிய தகவல்களைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டனர். பரம்பரை பரம்பரையாக கொலை செய்பவன் கூட இவ்வளவு குரூரமாக நடந்து கொள்ள மாட்டானே என்று போலீஸார் அதிர்ச்சி அடைந்து இது உண்மையா என்று தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர். மீர்பேட்டை ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


குருமூர்த்தி ஒரு முன்னாள் ராணுவ வீரர். தற்போது டிஆர்டிஓ எனப்படும் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். குருமூர்த்தி - மாதவி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குருமூர்த்தி, மாதவிக்குத் திருமணமாகி 13 வருடங்களாகிறது. குருமூர்த்தியின் செயலால் ஹைதராபாத்தே ஆடிப் போயுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்