"ஓ.. ரொம்ப அழகா இருந்தா உடனே கிட்னாவா?".. வடிவேலு காமெடியை சீரியஸாக்கிய "ஹைதராபாத் திரிஷா"

Su.tha Arivalagan
Feb 24, 2024,05:49 PM IST

ஹைதராபாத்: டிவி ஆங்கர் மீது மோகம் கொண்ட ஒரு பெண் தொழிலதிபர் அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆள் வைத்துக் கடத்திய சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிலதிபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.


இந்த டிவி ஆங்கரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் இப்பெண். அவரது காரில் டிராக்கர் கருவியை அவருக்கே தெரியாமல் பொருத்தி அவர் எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்பதை கண்காணித்து வந்துள்ளார். அதன் பின்னர் அவரைக் கடத்தியுள்ளார். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.


"ஆர்யா".. அப்படின்னு ஒரு படம் பல வருஷத்துக்கு முன்னாடி வந்தது. மாதவன், பாவனா நடித்த படம். அதில் வடிவேலு ஸ்னேக் பாபு என்ற கேரக்டரில் கலக்கியிருப்பார். அதில் ஒரு சீன் வரும், பாவனா அடியாட்களை வைத்து வடிவேலுவை கடத்தி விடுவார்.. கடத்திக் கொண்டு வரப்பட்ட வடிவேலு, தான் எதற்காக கடத்தப்பட்டுள்ளோம் என்றே தெரியாமல், பாவானாவைப் பார்த்து.. ஓ.. ரொம்ப அழகா இருந்தா உடனே கிட்னாவா.. ஆமா, என்கிட்ட எதுடா உன்னைய ஹெவியா லைக் பண்ண வச்சுச்சு.. முத்துப் போன்ற சிரிப்பா.. முரட்டுத்தோல் உடம்பா.. இல்லை என் நடையா.. நவரசத்தைக் காட்டும் என் முகமா.. பாடில இருக்கிற திடமா.. இல்லை பாக்கெட்டில் உள்ள பணமா..  எது உன்னை லைக் பண்ண வச்சுச்சு சொல்லு என் செல்லம்.. என்று பேசிக் கொண்டே போவார்.




இந்த காமெடி டெம்ப்ளேட் இன்று வரை பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு காமெடி சீன் இது. ஆனால் இது காமெடி சீன்.. ஹைதராபாத்தில் ஒரு பெண் சீரியஸாகவே இதைச் செய்து அதிர வைத்துள்ளார் அத்தனை பேரையும்.


போட்டோ பார்த்ததுமே திரிஷாவுக்குப் பிடிச்சுப் போச்சு


அந்தப் பெண்ணின் பெயர் திரிஷா.  31 வயதாகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் செய்து வருகிறார். இவர் மேட்ரிமோனி சைட் ஒன்றில் விளம்பரம் ஒன்றைப் பார்த்தார். விளம்பரம் கொடுத்திருந்தவரின் புகைப்படங்களைப் பார்த்த அவருக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய் விட்டது.  அவருடன் சாட் மூலம் பேச ஆரம்பித்தார்.


பேச ஆரம்பித்த சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்தது.. மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்தவரின் உண்மையான புகைப்படம் அல்ல அது என்றும், அது ஒரு டிவி ஆங்கரின் புகைப்படம் என்று.  இதனால் ஏமாற்றம் அடைந்த திரிஷாவின் கவனம் தற்போது, டிவி ஆங்கர் பக்கம் திரும்பியது. டூப்ளிகேட் எதுக்கு, பேசாம, ஒரிஜினல் நபரையே திருமணம் செய்து கொண்டால் என்ன என்று யோசித்தார். அவரது தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்தார்.


"கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன் மாமா"




அவரது பெயர் பிரணவ். ஐடியில் வேலை பார்த்து வருகிறார். அப்படியே சைடில் தெலுங்கு டிவி சானல் ஒன்றில் ஆங்கராகவும் இருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்ட திரிஷா, உங்களது விளம்பரத்தைப் பார்த்தேன். எனக்கு உங்களை ரொம்பப் பிடித்திருக்கிறது. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு பிரணவ், அந்த விளம்பரத்தை நான் கொடுக்கவில்லை. யாரோ ஒரு நபர் என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன், ஸாரி என்று கூறியுள்ளார். 


ஆனால் அந்தப் பெண் விடவில்லை... "அதெப்படி உங்களை விடுவேன்.. பிடிச்சுப் போயிருச்சே.. விட மாட்டேன்ல".. என்று கூறி தொடர்ந்து அவருக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிவி ஆங்கர் அந்தப் பெண்ணின் எண்ணை பிளாக் செய்து விட்டார்.  இப்போது இன்னும் வெறியாகி விட்டார் அப்பெண். "கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்டி மாமா" என்று திமிரு படத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டி போல ஆவேசமான அவர், ஆங்கரைக் கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்ய தீர்மானித்தார்.


"மேடம்" கிட்ட பேசவா மாட்டே.. இந்தா வாங்கிக்கோ!


இதையடுத்து அந்த டிவி ஆங்கரின் காரில் அவருக்கே தெரியாமல் டிராக்கர் கருவியைப் பொருத்தி அவரது நடமாட்டத்தைக் கண்காணித்தார். நான்கு பேரை கடத்துவதற்காக செட் செய்தார். பிப்ரவரி 11ம் தேதி டிவி ஆங்கர் கடத்தப்பட்டார். அவரை அந்தப் பெண்ணின் அலுவலகத்திற்குக் கொண்டு சென்ற அவர்கள் அங்கு வைத்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.


"என்னைய எதுக்குடா கடத்துனீங்க.. நான் என்னடா தப்பு செஞ்சேன்" என்று அவர் கதறியுள்ளார். அதற்கு அந்த குண்டர்கள், மேடம் போன் நம்பரை பிளாக் பண்ணுவியா. அவங்க கிட்ட பேச மாட்டியா என்று கூறி அடித்து உதைத்திருக்கிறார்கள்.  அடி தாங்க முடியாமல் பயந்து போன டிவி ஆங்கர், பெண்ணின் நம்பரை அன் பிளாக் செய்வதாகவும், போனில் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை அந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர். 


சரமாரி வழக்கு.. அதிரடி கைது




தப்பிப் பிழைத்து ஓடி வந்த அவர் உடனடியாக உப்பால் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார், கடத்தல், மிரட்டல், அடித்து உதைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.


விசாரணைக்குப் பின்னர் அந்தப் பெண் தொழிலதிபரையும், கடத்தல்காரர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். கல்யாணம் செய்து கொள்வதற்காக ஒரு டிவி ஆங்கரை பெண் தொழிலதிபர் இப்படி ஆள் வைத்துக் கடத்தி அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் மூல காரணமான அந்த மேட்ரிமோனி விளம்பரம் கொடுத்த நபர் மீது ஏதாவது ஆக்ஷன் எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.... முதல்ல அந்த நபரைப் பிடிச்சு நாலு காட்டு காட்டுங்க ஏட்டாய்யா!!