சோடி போடலாமா சோடி.. தம்பதியராக களத்தைக் கலக்கும் அரசியல்வாதிகள்.. டிம்பிள் டூ ராதிகா வரை.. ஓர் அலசல்

Manjula Devi
Mar 24, 2024,05:01 PM IST

சென்னை: எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அதேபோல முன்னெப்போதையும் விட இப்போது அரசியலிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர். அதிலும் கணவர் மனைவியாக இணைந்தே சாதிக்கும் அரசியல்வாதிகள் அதிகரித்து விட்டனர். அப்படிப்பட்ட ஜோடி தலைவர்களை இங்கே பார்க்கலாம், வாங்க.


அரசியலில் வாரிசுகள் வருவது என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகின்ற செயலாக உள்ளது. அதாவது தந்தை அல்லது தாய் அரசியல் இருப்பார்கள். அவர்களுக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பிள்ளைகள் வருவாங்க.  அப்பா, அப்பாவுக்கு அடுத்த படி மகன் அல்லது மகள் என்ற அடிப்படையில் அரசியலில் வருவது என்பது அனைவரும் அறிந்ததே.


ஆனால் இப்போது கணவன் மனைவியாக அரசியலுக்கு வருவோர் அதிகரித்து விட்டனர். தம்பதியர்களாக இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட ஜோடிகளைத்தான் பார்க்கப் போகிறோம்.


அகிலேஷ் யாதவ் -டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி)




அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர். இப்போது சட்டமன்ற உறுப்பினராக, உத்தரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவராக  தற்போது செயல்பட்டு வருகிறார். இவருடைய தந்தை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ். இவர் உத்திரபிரதேசத்தின் மையின்பூரில் இருந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.


மாமனார், கணவர் வரிசையில் டிம்பிளும் தேசிய அளவில் தெரிந்த முகமாக மாறியிருக்கிறார். பலரின் அன்பையும் பெற்றவர். நோ நான்சென்ஸ் அரசியல்வாதியாக அறியப்பட்ட ஒரு பெண் தலைவரும் கூட. மாநிலத்தில் கணவரின் அரசியலுக்கு பக்க பலமாகவும், தேசிய அரசியலில் கட்சிக்கு நல்ல முகமாகவும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார் டிம்பிள்.


ராஜீவ் காந்தி- சோனியா காந்தி (காங்கிரஸ்)




இந்த ஜோடியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்திரா காந்தி  மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்திக்கு மனைவியாக மிகப் பெரிய உதவியாக இருந்தவர், தோளோடு தோள் நின்றவர் சோனியா காந்தி.  ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கும் பொறுப்பு இவரை நோக்கி வந்தபோது தயங்காமல் அதை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார். பிரதமர் பதவி தேடி வந்தபோதும் கூட அதை மன்மோகன் சிங்கிடம் கொடுத்து விட்டு கட்சிப் பணியாற்றியவர். இப்போது வரை கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவரும் கூட.


டி. ராஜா-ஆனி ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)




டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர். இவர் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும் கூட. இவருடைய மனைவி ஆனி ராஜா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆவார். பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன் நிற்பவர். இவர் கேரளா வயநாட்டு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக களம் கண்டுள்ளார். கணவரும் மனைவியுமாக அரசியல் களத்தில் முன்னேறி வந்தவர்கள் இவர்கள் இருவரும்.


டாக்டர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா அன்புமணி (பாட்டாளி மக்கள் கட்சி)




தர்மபுரியில் பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார் சவுமியா. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது சகோதரர் விஷ்ணுபிரசாத் ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருக்கிறார்.இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். சவுமியா தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். டாக்டர் அன்புமணிக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பவர் சவுமியா. இப்போது தனது கணவரின் அரசியலில் நேரடியாக பங்கேற்று அவருக்கு உற்ற துணையாக மாற களம் கண்டுள்ளார்.


பிரகாஷ் காரத்-பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)


பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய செயலாளராக  பணியாற்றியவர். தற்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆவார். இவருடைய மனைவி பிருந்தா காரத். இவர் அனைத்திந்திய ஜனநாயகப் பெண்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும், மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தவர். பிரகாஷ் காரத்தைப் போலவே, பிருந்தா காரத்தும் நாடறிந்த ஒரு பெண் தலைவராக திகழ்பவர் ஆவார்.


விஜயகாந்த் -பிரேமலதா (தேசிய முற்போக்கு திராவிட கழகம்)




தமிழ்நாட்டில் தேமுதிக கட்சியை நிறுவியவர் விஜயகாந்த். இவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இவர் அரசியலில் நுழையும் போதே தனது மனைவியுடன்தான் வந்தார். மனைவியையும் கூடவே கூட்டிட்டு வர்றீங்களே என்ற விமர்சனம் எழுந்தபோது, மனைவி கணவருக்கு துணையாக வர்றாங்க. இதில என்ன தப்பு இருக்கு. ஒரு கணவர் வேலை  செய்யும் போது மனைவி உதவி செய்றாங்க. இதை அரசியல் வாரிசு என்று சொல்லாதீங்க என்று கூறியவர் விஜயகாந்த்.


விஜயகாந்த் இருந்தபோதே அவரது அரசியலில் துணை நின்றவர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் இறப்பிற்கு பின்னர் தேமுதிகவின் பொது செயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார். இவர்களுடைய மகன் விஜய பிரபாகரன். இவரும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.


சரத்குமார் - ராதிகா (பாஜக)




நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியின் நிறுவனர் ஆவார். இவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக விளங்கியவர். இவருடைய மனைவி நடிகை ராதிகா. இவர் சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்போது சரத்குமார் ராதிகா இருவரும் பாஜகவில் இணைந்து விட்டனர். வரும் லோக்சபா தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகரில் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிறைய வெற்றிகரமான கணவன் மனைவி அரசியல் ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதில் பலர் புகழ் பெற்று விளங்கியுள்ளனர்.. சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் மக்கள் அவர்களுக்குத் தர வேண்டியதை சரியாக கொடுக்கத் தவறுவதில்லை. இதில் நாம் பார்க்க வேண்டியது, பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் காட்டுவதைத்தான்.. அதை நாம் வரவேற்க வேண்டும்.. 


எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் பெண்கள் அதிகம் இருக்கும்போது அந்த இடத்தில் நேர்த்தியான, தெளிவான, சரியான நிர்வாகம் இருக்கும். அரசியலிலும் அது உருவாக வேண்டும்.. அதற்குத் தகுதியான, திறமையான பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்.