வங்கிக் கணக்கில் நாமினியாகப் போடாத மனைவி.. ஆத்திரமடைந்த கணவர்.. அடுத்து அவர் செய்த கொடூரம்!

Su.tha Arivalagan
Jan 30, 2024,06:04 PM IST

போபால்: இன்சூரன்ஸ், வங்கி கணக்கு, சர்வீஸ் புக் என எதிலுமே தன்னை நாமினியாக மனைவி பெயர் சேர்க்காததால் கோபமடைந்தார் கணவர். அடுத்து அவர் செய்த காரியமும், அதைத் தொடர்ந்து தான் செய்த தவறை மறைக்க செய்த காரியமும் அவரை வசமாக போலீஸில் சிக்க வைத்து விட்டது.


மத்தியப் பிரதேச மாநிலம் திந்தோரி மாவட்டம் சாஹாபுரா என்ற ஊரில் துணைக் கலெக்டராகப் பணியாற்றி வந்தவர் நிஷா நபித். இவரது கணவர் பெயர் மனீஷ் சரமா. இவர் வேலை வெட்டி என்று எதற்கும் போகாமல் வீட்டிலேயே வெட்டியாக இருந்து வந்துள்ளார்.


இருவரும் மேட்ரிமோனியல் சைட் ஒன்றின் மூலமாக அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அந்தத் திருமணத்தில் நிஷாவின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. பின்னர்தான் குடும்பம் சமரசமாகியுள்ளது.




மனீஷ் சர்மா உருப்படியாக எந்த வேலைக்கும் போகவில்லையாம். மனைவியிடம் அடிக்கடி செலவுக்குப் பணம் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே வந்துள்ளார். இதுகுறித்து தனது சகோதரி நீலிமாவிடம் சொல்லி அழுவாராம் நிஷா.


இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மனைவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு விட்டதாக கூறி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளார் மனீஷ் சர்மா. அங்கு நிஷாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீலிமா, உடனடியாக போலீஸாரைத் தொடர்பு கொண்டு, மனீஷ் சர்மாதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்துள்ளார். 


இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று மனீஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது எனது மனைவிக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. சனிக்கிழமையன்று அவர் விரதம் இருந்தார். இரவில் வாந்தி எடுத்தார். பின்னர் மாத்திரை சாப்பிட்டு விட்டு படுக்கப் போய் விட்டார். காலையில் எழுந்திருக்கவில்லை. சரி ஞாயிற்றுக்கிழமைதானே மெதுவாக எழுந்திருக்கட்டும் என்று விட்டு விட்டேன். 10  மணிக்கு வேலைக்காரப் பெண் வந்தார். அதன்பிறகு நான் வெளியே போய் விட்டு 2 மணிக்குத் திரும்பினேன். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை எழுப்ப முயன்றேன். சிபிஆர் கொடுத்துப் பார்த்தேன். பிறகுதான் டாக்டரிடம் அழைத்துச் சென்றேன் என்றார்.


ஆனால் போலீஸாருக்கு அவரது வாக்குமூலத்தில் திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எதுவும் பெரிதாக சிக்கவில்லை. அப்போது ஒரு போலீஸ்காரர் வாஷிங் மெஷினைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு தலையணை உறையும், பெட் ஷீட்டும் கிடப்பதைப் பார்த்து எதேச்சையாக எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது இரண்டிலுமே ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக அந்த இரண்டும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ரத்தக்கறை, நிஷாவின் உடலிலிருந்து வந்த ரத்தக் கறை என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.


இதையடுத்து போலீஸார் மனீஷ் சர்மாவிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவே அவர் உண்மையைக் கக்கி விட்டார்.


மனீஷ் சர்மா மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் நிஷா. இதனால் தனது சர்வீஸ் புக், இன்சூரன்ஸ், வங்கிக் கணக்கு என எதிலுமே அவர் தனது கணவர் பெயரை வாரிசுதாரராக சேர்க்கவில்லை. இதனால் கோபமடைந்தார் மனீஷ் சர்மா. இதுகுறித்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால் அவரோ சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். 


இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன மனீஷ் சர்மா, நிஷா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார். மருத்துவமனைக்கு நிஷாவை, மனீஷ் சர்மா கொண்டு சென்றபோது நிஷாவின் மூக்கிலிருந்தும், காதிலிருந்தும் ரத்தம் வந்திருப்பதை டாக்டர்களும் கண்டறிந்துள்ளனர். அவர்களும் போலீஸாரிடம் இதுகுறித்துக் கூறவே போலீஸார் உடனடியாக மனீஷ் சர்மாவைக் கைது செய்தனர். அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.