மனைவிக்குப் பிறந்த நாள்.. சீரியல் பல்புகளால் விபரீதம்..கணவருக்கு நேர்ந்த கதி.. மாம்பலத்தில் பரிதாபம்

Manjula Devi
Jun 07, 2024,03:39 PM IST

சென்னை: சென்னையில் மனைவியின் 25ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண்முன்னே கணவர் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருக்கு வயது 29. சொந்தமாக பார்சல் சர்வீஸ் தொழிலை நடத்தி வருபவர். இவருடைய மனைவியின் பெயர் கீர்த்தி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியர் இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. 




அகஸ்டின் பாலின் மனைவி கீர்த்திக்கு 25வது பிறந்த நாள் வந்துள்ளது. மனைவி மீது ரொம்பப் பாசமாக இருந்தவரான பால் இதை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்காரம் செய்துள்ளார்.  அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே துடி துடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது பிறந்த நாளில், தனது கண் முன்பாகவே கணவர் துடிதுடித்து உயிரிழந்தது கீர்த்தியை அதிர வைத்து விட்டது. கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுதல் கூறினர். அந்தப் பகுதியே இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது. 


எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனை பிறந்த நாளன்று கணவர் இப்படி இறந்தது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.