18 வயதுக்கு மேற்பட்ட மனைவியிடம்.. "கணவன் கட்டாய உறவு குற்றமல்ல".. அலகாபாத் ஹைகோர்ட்!

Su.tha Arivalagan
Dec 11, 2023,05:30 PM IST

பிரக்யாராஜ்: மனைவிக்கு 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தால், அவருடன் கணவன் கட்டாய உறவு வைத்துக் கொண்டால் அதை குற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. 


ஒரு பெண்ணுக்கு திருமணமானாலும் கூட அவருக்கு வயது 15 முதல் 18க்குள் இருந்தால், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரத்துக்கு சமம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக  அலகாபாத் ஹைகோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளா். தனது மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு  கொண்டதாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் கணவர்.




இதை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஷ்ரா பெஞ்ச் அளித்த தீர்ப்பின்போது இந்த வழக்கைப் பொறுத்தவரை மனைவியின் வயது 18க்கு மேற்பட்டதாக உள்ளது. இதை பாலியல் பலாத்காரம் என்று கருத முடியாது. இயற்கைக்குப் புறம்பானதாகவும் இதை எடுத்துக் கொள்ள முடியாது. இதை வலுக்கட்டாயமான உறவாகவும் கருத முடியாது என்று கூறி கணவர் மீது போடப்பட்ட 377வது பிரிவு வழக்கை நீக்கி உத்தரவிட்டார்.