அமெரிக்காவை அச்சுறுத்தும் "ஹிலாரி".. தெற்கு கலிபோர்னியாவுக்கு ஆபத்து!

Su.tha Arivalagan
Aug 19, 2023,03:14 PM IST
கலிபோர்னியா: அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஹிலாரி புயல். இந்தப் புயலானது தெற்கு கலிபோர்னியாவை தாக்கி பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய புயலாக இது உருவாகி கலிபோர்னியாவின் தென் பகுதியை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மிக மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா வளைகுடாவை நோக்கி இந்த புயல் தற்போது நகர்ந்து வருகிறது.



இது கரையைக் கடக்கும்போது மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மின்சப்ளை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியா மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தெற்கு நெவடா மாகாணத்திற்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மிக பலத்த காற்றுடன், மிக மிக கன மழையுடன் இந்த புயல் இரு மாகாணங்களையும் தாக்கும். கடலில் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பும்.  கரையோரப் பகுதிகளில் கடல் நீர் புகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா  - மெக்சிகாவின் சான்டியாகோ பகுதி முதல் வடக்கு லாஸ் ஏஞ்செலஸ் வரை புயல் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல காடலீனா தீவும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த புயலானது தெற்கு மெக்சிகோவின் பஜா கலிபோர்னியாவிலிருந்து தென் கிழக்கே 285 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  வடக்கு வட மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது. 4ம் வகை புயலாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.