சென்னை வந்தார் பிரக்ஞானந்தா.. ஆட்டம் பாட்டத்துடன் செம வரவேற்பு

Su.tha Arivalagan
Aug 30, 2023,10:59 AM IST

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிரதமாதமாக விளையாடி உலகின் கவனத்தை ஈர்த்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா. 18 வயதேயான பிரக்ஞானந்தாவின் ஆட்டம், கார்ல்சனை தண்ணீர் குடிக்க வைத்து விட்டது.


ரெகுலரான இரண்டு சுற்றுக்களும் டிராவில் முடிந்த நிலையில் டை பிரேக்கரில் ஒரு சுற்றில் வென்று, 2வது சுற்றை டிரா செய்து வெற்றி பெற்றார் கார்ல்சன். ஆனால் அத்தனை பேரையும் கவர்ந்தது என்னவோ பிரக்ஞானந்தாதான்.


மொத்தம் நடந்த 4 சுற்றுக்களில் 3 சுற்றுக்களை பிரக்ஞானந்தா டிராவில் முடித்ததே அவருக்கு மிகப் பெரிய வெற்றிதான் என்பது செஸ் நிபுணர்களின் கருத்தாகும்.  2வது இடத்தைப் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில் தனது செஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் பிரக்ஞானந்தா. அவருக்கு விமான நிலையத்தில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து பிரக்ஞானந்தாவை வரவேற்று மகிழ்ந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பிரக்ஞானந்தா வரவேற்கப்பட்டார்.


செய்தியாளர்களிடம் பிரக்ஞானந்தா பேசுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. செஸ் விளையாட்டுக்கு நல்லது நடந்துள்ளது. இங்கு இத்தனை பேர் திரண்டு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முதல்வரை பார்க்கவிருக்கிறேன் என்று கூறினார் பிரக்ஞானந்தா.


பிரக்ஞானந்தாவின் பள்ளி வகுப்புத் தோழர்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.  கூட்டத்தில் சற்று திக்கித் திணறித்தான் போனார் பிரக்ஞானந்தா. இருப்பினும் அவரை வரவேற்க வந்திருந்தோர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் காணப்பட்டனர்.