ஜப்பானை உலுக்கிய கடும் நிலநடுக்கம்.. சுனாமி அலைகள் தாக்கின.. வீடுகள், கட்டடங்களுக்கு பெரும் சேதம்
டோக்கியோ: வட மத்திய ஜப்பானில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து உருவான சுனாமி அலைத் தாக்குதலால் பெரும் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
வட மத்திய ஜப்பானில் இன்று 7.6 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இஷிகாவா, நிகடா, டோயாமா ஆகிய மேற்கு கடலோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் தற்போது 1 முதல் 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சுனாமி அலைத் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. கடும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துத் தெரியவில்லை. இப்போதே கடல் பல இடங்களில் கொந்தளிப்புடன் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
கடந்த 3 மணி நேரத்தில் சராசரியாக 4.5 ரிக்டர் அளவிலான 30க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளனர். பல பிராந்தியங்களில் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியது தொடர்பான வீடியோக்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. சாலைகளிலும் சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டடத்தில், நிலநடுக்கத்தின்போது அந்தத் தளமே பேயாட்டம் போட்டு ஆடும் வீடியோ அதிர வைப்பதாக உள்ளது.
இதற்கிடையே, தற்போது ரஷ்யா மற்றும் வட கொரியாவுக்கும் சுனாமி அலை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஜப்பான் பூகம்பவியல் கழகம் எச்சரித்துள்ளது.