மியான்மர் தொடங்கி தாய்லாந்து வரை.. அதிர வைத்த நிலநடுக்கம்.. கட்டடங்கள் பிளந்ததால் பரபரப்பு

Su.tha Arivalagan
Mar 28, 2025,05:15 PM IST

பாங்காக்:   மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை பாதிப்பை சந்தித்துள்ளது.


மியான்மர் தலைநகர் நய்பியாடாவ் நகரிலிருந்து கிட்டத்தட்ட  250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சகாய்ங்க் என்ற நகரில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.  இந்த நிலநடுக்கம் பாங்காக்கிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சக்தி வாய்ந்ததாக இந்த நிலநடுக்கம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தாய்லாந்தின் வட பகுதி முழுவதும் பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. மெட்ரோ, ரயில் சேவைகளும் கூட பாதிக்கப்பட்டன. பாங்காங்க்கிலும், சீனாவின் யுனான் மாகாணத்திலும் பூகம்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.


பூகம்பத்தைத் தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் பெடோங்க்ட்ரான் சினாவத்ரா அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாங்காக்கில் பல கட்டடங்கள் இடிந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் பலரும் இதுதொடர்பான வீடியோக்கள் ஏராளமாக வந்தவண்ணம் உள்ளன.


மியான்மரில் இர்ரவாடி ஆற்றுப் பாலத்தின் மீது போடப்பட்டிருந்த பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.