இந்தியன் படத்தின் மாஜிக் எப்படி இருந்தது தெரியுமா?.. X பிரபலம் முரளி கண்னனின் அனுபவம்..!

Su.tha Arivalagan
Jul 10, 2024,04:48 PM IST

சென்னை: இந்தியன் 2 படம் குறித்த ஹைப் அதிகமாக உள்ளது.. படம் குறித்த எதிர்பார்ப்பு நிமிடத்துக்கு நிமிடம் தாறுமாறாக எகிறிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகமான இந்தியன் குறித்த ஒரு அருமையான பதிவைப் போட்டுள்ளார் எக்ஸ் தளத்தின் பிரபலமான முரளி கண்ணன் @ டீக்கடை. அவரது பதிவிலிருந்து..


1996 ஆம் ஆண்டு, இந்தியன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக, அந்தப் படத்தைப் பற்றி பொதுவான மக்களுக்கு தெரிந்தது எல்லாம்...


கமல்ஹாசன் ஒரு வயதான கேரக்டரில் நடிக்கிறார். 

ரஹ்மான் இசையில் அட்டகாசமான பாடல்கள்.




இந்தப் படத்தைப் பற்றி பத்திரிகைகளில் எழுதும் ரைட் அப்புகள், போடப்படும் ஸ்டில்கள் இவற்றில் கூட படத்தின் கதையைப் பற்றி கணிக்க முடியாதபடியே இருந்தது. சங்கர் எல்லா பேட்டிகளிலும் இது ஒரு எவெரிடே ப்ராப்ளம் பற்றிய கதை என்பதுடன் முடித்துக் கொண்டார்.


இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், விஜயசாந்தியின் மேக்கப் மேனாக இருந்தவர். தனது மேக்அப் மேனுக்காக விஜயசாந்தி,  கர்தவ்யம் என்று ஒரு படம் நடித்துக் கொடுத்தார். தெலுங்கில் அது பெரிய வெற்றி. அது தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் என டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றி நடை போட்டது.


அதன் பின்னர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன் ஆகிய படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார் ரத்னம். அங்கே கிடைத்த வெற்றியால் ஷங்கரை வைத்து நேரடியாகவே ஒரு படம் தயாரிக்கலாம் என பண மூட்டையுடன் இங்கே வந்தார்.


இந்தியன் திரைப்படத்திற்கு முதலில் எட்டு கோடி பட்ஜெட் என முடிவானது. ஆனால் முடியும் போது 12 கோடி ஆனது. பாடல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட செலவு ஆனது. அக்கடானு நாங்க உடைபோட்டா பாடலுக்கு, 


மும்பை மாடல்களை அழைத்து வந்திருந்தார்கள். தமிழ்நாடு டான்ஸ் யூனியன் அவர்களை வைத்து பாடல் எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை. எனவே டான்ஸ் யூனியன் கார்டு அவர்களுக்கு எடுத்தார்கள். அப்போது அந்த கார்டின் விலை ஒருவருக்கு 40 ஆயிரம். அன்றைய தங்க மதிப்போடு ஒப்பிட்டால் இன்று 50 லட்சம். 


இப்படி எக்குத்தப்பாக பட்ஜெட் உயர்ந்து 12 கோடியில் நின்றது. 


படம் பார்க்க சென்றவர்களுக்கு, ஒரு நிறைவான அனுபவத்தை கொடுத்தது இந்தியன் படம். இரண்டு அட்டகாசமான ஃபிளாஷ்பேக்குகள் படத்தை தாங்கி நின்றன. கமல்ஹாசனின் வயதான கெட்டப் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் நிறைய வந்தார்கள். 


சங்கம் தியேட்டரில் 175 நாட்கள் ஓடியது இந்தியன். அந்த 25 வது வாரத்தில் கூட சனி ஞாயிறு மாலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக நிரம்பி வழிந்தன. தமிழ்நாடு முழுவதும் பெரிய ஊர்களில் எல்லாம் 100 நாட்களை அசால்டாக கடந்தது.


மொத்தம் 50 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்தது இந்தியன். 


இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை ராஜ் டிவிக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் படம் ராஜ் டிவியில் முதல் முறை போட்ட போது படம் முடிய ஆறு மணி நேரமானது. அவ்வளவு விளம்பரங்கள் இந்த படத்துக்கு கொடுக்கப்பட்டன. ஆறு மணி நேரமும் மக்கள் அசையாமல் படத்தைப் பார்த்து கண்டுகளித்தார்கள்.


இந்தியன் 2 இந்த படத்தில் இருந்து எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்று பார்க்க ஆவல்.


நன்றி: @teakkadai1