சிஸ்டர்.. காத்து வந்து தலைமுடியை கலைச்சு விடுதா.. நோ டென்ஷன்.. இதைப் படிங்க!

Su.tha Arivalagan
Aug 01, 2023,01:23 PM IST
- மீனா

சென்னை: "தலை கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்".. காலையிலேயே ஒரு பாட்டு வந்து காதை தென்றல் போல தழுவிச் சென்றது.. பாட்டெல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனால் அந்தக் காத்து கோதி விட்டுப் போனால் பரவாயில்லையே.. சிக்கலாக்கிட்டு போறதுதானே நமக்கு பெரிய பஞ்சாயத்தா இருக்கு!

கரு கரு கூந்தலைப் பாதுகாத்து பத்திரமா மெயின்டெய்ன் பண்றது இருக்கே.. அப்பாடி போதும் போதும்னு ஆயிடுது. வெயில் வந்து முடிஞ்சா.. காத்து அடிக்கும்.. காத்து அடிச்சு முடிஞ்சதும் மழை வரும்.. மழை முடிஞ்சா பனி.. பனி முடிஞ்சா மறுபடியும் வெயில்.. இது ரொட்டீனா வரும் விஷயம்தான். பருவ நிலை மாற்றம் என்பது நாம் எல்லாரும் சந்திக்கக்கூடிய நிகழ்வுதான். இந்த மாற்றம் நல்லதாய் அமைந்தால் பிரச்சனை இல்லை , ஆனால் பிரச்சினையாய் அமைந்தால் நல்லாவா இருக்கும்!



இந்த பருவநிலை மாற்றத்தால் நாம் முகத்திலும் தலைமுடியிலும் சில மாற்றங்கள் வருவது இயல்புதான். ஆனால் அதுவே இயல்பு மீறி போனால் இர்ரிட்டேஷன் ஆகத்தானே செய்கிறது. முக அழகு, தலை முடி அழகு.. இந்த இரண்டுமே பெண்களுக்கு மிக மிக முக்கியமானது மட்டுமல்ல.. அதுக்காக அதிகம் கவலைப்படுவதும் பெண்கள்தான். வெயிலும், மழையும், காற்றும் மாறி மாறி வரும்போதெல்லோம்.. அச்சச்சோ என்று பதட்டமடைவது பெண்களின் இயல்பாகி விட்டது.

பருவ நிலை மாற்றத்தால் இது இரண்டையும் இழக்க நேரிடும் என்ற அச்சமே மேலோங்கி நிற்கும். கோடைக்காலத்தினால் ஏற்பட்ட தாக்கமே இன்னும் முடியல, அதுக்குள்ள இந்த காற்று காலம் ஆரம்பிச்சாச்சு... அதுவும் ஆடிக் காத்துன்னா சும்மாவா.. ! கோடைகாலத்தில் கருத்த முகத்தை பளிச்சென்று ஆக்க பல யுக்திகளை கையாண்டியிருப்பீங்க, வறண்ட முடியையும் கூட வளமாக மாற்றி இருப்பீங்க. ஆனால் இந்த ஆடிக் காத்து காலத்திலும் உங்கள் முடியை கலையாமல் எப்படி பாதுகாப்பது என்பதை தான் இங்கே நான் சொல்ல போறேன். 

உங்க களையான முகத்திற்கு ஏற்ப, முடியும் கலையாமல் களையாக இருந்தால் இன்னும் நீங்க அழகு தானே! வர்ணனை எல்லாம் போதும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லும்மா என்று தானே நீங்க நினைச்சீங்க.. எங்களுக்கும் மைன்ட் வாய்ஸ் கேட்ருச்சு சரி, சரி சொல்லிடுறேன் கேட்டுக்கோங்க. தலை முடி பிரச்சனைக்கு நாம் செய்ய வேண்டிய தலையாய  கடமை என்னன்னா.. அதை நன்கு பராமரிப்பது தான். காற்றில் பறந்து வரும் தூசியினால் உங்கள் முடியின் ஆரோக்கியம் கெட்டுப் போகும். தலையில் அழுக்கு சேரும்.. தலை முடியின் வேர்ப் பகுதி இதனால் பாதிக்கப்படும்.. தலை முடியில் சிக்கு அதிகமாகும். முடி உதிர்தல் , முடி வலுவிழந்து போதல், முடி உடைதல் போன்ற பல பிரச்சனைகள் நேரிடலாம்.

இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஐந்து விதமான முறைகளை பின்பற்றினால் போதும். அவை

1. ஹேர் ஸ்பிரே
2. ஹேர் ஆயில்
3. ஹேர் மாஸ்க்
4. செம்பருத்தி ஷாம்பூ
5. இயற்கையான கண்டிஷனர்

இந்த ஐந்து முறைகளையும் ஒவ்வொன்றாக நாம் எப்படி செயல்படுத்தலாம் என்று பார்க்கலாமா.

1. ஹேர் ஸ்பிரே:

2 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் கருஞ்சீரகம். இது இரண்டையும் ஒன்று இரண்டாக தூள் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து, பின்பு வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்த ஸ்பிரேயை தலைக்கு குளிக்கிறதுக்கு 15 நிமிஷத்துக்கு முன்னாடி, இதை தலையில் ஸ்பிரே செய்து  மசாஜ் செய்த பின்பு எப்பவும் போல குளிக்கலாம்.

2. ஹேர் ஆயில்:

நல்லெண்ணெய் குளியல் நாம் எல்லாரும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இந்த நல்லெண்ணையோடு சில பொருட்களை சேர்க்கும்போது இதனுடைய பலன் மிகவும் அதிகமாக நமக்கு கிடைக்கும். அது எப்படி தயார் செய்வது என்றால், முதலில் நல்லெண்ணெயை அடுப்பில் மிதமான சூடு வரும் வரை காய்ச்சிய பின், இதனுடன் சீரகம் 1/4 ஸ்பூன், மிளகு 1/4 ஸ்பூன் ஒரு பூண்டு மற்றும் ஒரு சின்ன துண்டு சுக்கு இவற்றையெல்லாம் இதனுடன் சேர்த்து சூடாக்கி வடிகட்டிய பின்பு நாம் இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் உங்கள் உடல் சூட்டை குறைத்து, முடிக்கும் ஆரோக்கியத்தை தரும். 

3. ஹேர் மாஸ்க்:

ஹேர் மாஸ்க் செய்வதற்கு வாழைப்பழம், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் இவையே போதுமானது. பாதி வாழைப்பழத்துடன் 1 ஸ்பூன் தேங்காய் பால் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்  இதை மூன்றையும் சேர்த்து அரைத்தால் பேஸ்���் போல் வரும். இதை அப்படியே நம் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்

4. செம்பருத்தி  ஷாம்பு:

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருளை வைத்து கெமிக்கல் இல்லாத ஷாம்பு நம்மால் வீட்டிலேயே தயார் செய்ய முடியும். இதை தயார் செய்வதற்கு நமக்கு தேவையான பொருள் என்றால் அது செம்பருத்தி பூ, பூந்திக்கொட்டை, வெந்தயம், மற்றும் சீயக்காய் இவைகள் தான். பூந்தி கொட்டை என்பது இயற்கையாகவே நமக்கு நுரை தரக்கூடிய ஒரு காய். இவை எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் எளிமையாக கிடைக்கக்கூடியது தான்.

முதலில் ஆறு பூந்தி கொட்டைகளை தட்டி, கொட்டையை நீக்கிவிட்டு இதனுடன் இரண்டு ஸ்பூன் வெந்தயம் மூணு சீயக்காய் இவற்றையெல்லாம் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10 முதல் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை ஊறிய பின்பு இவற்றுடன் 5 செம்பருத்தி பூ இதழ்களை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு வடிகட்டி நாம் இந்த ஷாம்புவை தலையில் தேய்த்து குளிக்கலாம். இந்த வகை ஷாம்பு நம் தலை முடியில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வேறு எவ்வித பிரச்சனையும் வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

5. இயற்கையான கண்டிஷனர்:

ஆலோவேரா ஜெல்லை பயன்படுத்தி நாம் இந்த கண்டிஷனரை செய்யலாம். அலோவேரா ஜெல் மற்றும் அதனுடன் ரோஸ் வாட்டர் ,வாசனைக்காக ரோஸ்  ஆயில் மூன்றையும் கலந்து பாட்டில் ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும். இவற்றை நாம் தலைக்கு குளித்த பிறகு  முடியில் அப்ளை செய்து கொண்டால் நம்முடைய முடிக்கு நல்ல கண்டிஷனராக இது இருக்கும். இந்த கண்டிஷனரை பயன்படுத்தும் போது உங்கள் முடி காற்றினால் கலையாமல் நேர்த்தியாக இருப்பதை உங்களால் உணர முடியும். மேலும் உங்கள்  தலை முடியை பாதுகாக்க  சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றி பாருங்களேன்.

அது என்னவென்றால் உங்க முடியை  சீவுவதற்கு பயன்படுத்தும் சீப்பின் பற்களுக்கு இடையே இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தலைக்கு குளித்த பிறகு உலர்த்துவதற்கு மென்மையான டவல் களை பயன்படுத்தி நிழலிலேயே தலைமுடியை உலர்த்த பழகிக் கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் தலைமுடியை எப்பேர்பட்ட காற்றினாலும் அசைக்க  முடியாது.

என்ன சிஸ்டர்ஸ் .. தெளிவாயிட்டீங்களா?