நாய்களுக்குத் தேவை.. கொஞ்சம் உணவும், தண்ணீரும்.. கூடவே பரிவான பராமரிப்பும்தான்!
Nov 28, 2023,06:59 PM IST
- சுபாஷினி ஜெயராமன்
"...... பேரை துரத்தித் துரத்தி தெருநாய் கடித்தது"... இந்த செய்தி எப்போது படித்தாலும் மக்களை பீதியில் அலற விடும்.
ஆனால், செய்தியில் சித்தரிப்பது போல நடந்ததா.. இல்லையா? உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.. பெரும்பாலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பாக அந்த நாய் கொடூரமாக கொல்லப்படும். சம்பந்தப்பட்ட நாயிடம் நீ எத்தனை பேரை கடிச்சே என்று விசாரிக் முடியாதே! பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தெருநாய்களையே ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல பலர் செய்திகள் வெளியிடுவதையும் பார்க்கிறோம். கடித்த பகுதி, தெரு என்று எதையும் போடாமல் பொத்தாம் பொதுவாக சிலர் வதந்திகளைப் பரப்புவதும் உண்டு.
ஆனால் விலங்கு நல ஆர்வலர்களை கேட்டால் இந்த நாய்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி குமுறித் தீர்க்கிறார்கள்.
கல்லடி, தடிக்கம்பால் அடிப்பது, வெந்நீர் ஊற்றுவது மற்றும் கர்ப்பமாக இருக்கும் நாயின்மீது கொடூர தாக்குதல், குட்டிகளுடன் சிவனே என்றிருக்கும் நாயை சீண்டி, உறுமினாலே கடித்து விட்டது கடிக்க வந்தது என்று பரப்பி விட்டு பலர், மனவக்கிரங்களை அந்த ஜீவன்களின் மேல் காட்டி தீர்த்துக்கொள்கிறார்கள்.....
பசியுடன் வயிறு ஒட்டி பரிதாபமாக இருக்கும் அந்த ஜீவன்களுக்கு கொஞ்சம் உணவு கூட வைக்காத மக்களுக்கு, தவிக்கும் அவற்றுக்கு தண்ணீர் கூட வைக்காத மக்களுக்கு அவற்றை கொல்லும் அதிகாரத்தை மட்டும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?
பொதுவாக நாய்கள் யாரையும் கடிப்பதில்லை. அவற்றுக்குத் தேவையானது - கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீர்தான். அது கிடைத்து விட்டால் போதும்... எங்காவது சுருண்டு படுத்துக்கொள்ளும். நீங்கள் பசி தாகத்துடன், உணவு, தண்ணீர் இல்லாமல் அவஸ்தையுடன் இருக்கும்போது யாராவது உங்களை சீண்டினால் அமைதியாக போய் விடுவீர்களா அல்லது சீண்டியவருடன் சண்டைக்கு போவீர்களா? அதேதான் நாய்களுக்கும் பொருந்தும்.
வெயில் காலத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மழைக்காலத்தில் குளிரிலும் படுக்க இடம் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் நாய்கள் சிரமப்படுகின்றன.. அடிபட்ட காயங்களின் வலி ஒருபக்கம் கொடூரர்களின் தாக்குதலுக்கு பயந்து ஒடுங்குவது நாய்களின் வாழ்க்கையாகி விட்டது அதிலும் தீபாவளி சமயங்களில் பட்டாசு தொல்லை நாய்களை பதற வைக்கும்.
கொஞ்சம் கருணையுடன் பாருங்கள்..!
அடிபட்டுப் போய் இருக்கும் நாய்களை தங்கள் செலவில் காப்பாற்றியும் இறந்து போகும் நாய்களை புதைத்தும் தன்னார்வலர்கள் அவற்றுக்காக பாடுபடுகிறார்கள்.. அப்படி உணவளித்து தடுப்பூசிகள் போட்டு பராமரிக்கும் நாய்கள் கூட கொடூரர்களால் தாக்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வழக்கில் நீதிபதியொருவர், தெருநாய்களை, உணவு தண்ணீர் கொடுத்து பராமரித்தால் அவை எந்த தொல்லையும் தருவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்..
மனிதன் தனது சுயலாபத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும், வேட்டையாடி உணவு சாப்பிட்ட நாயை தன்னுடன் வைத்துக்கொண்டு அதைப் பழக்கி வீட்டு விலங்கு ஆக்கிக்கொண்டான் என்று வரலாரு சொல்கிறது. இப்பொழுது காணப்படும் நாய் இனம் என்பது, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த நாய் இனத்திலிருந்து உடல் அமைப்பு, பற்களின் அமைப்பு வேறுபட்டவை என்று தெரிகிறது.
வீட்டு விலங்காக மனிதனால் மாற்றப்பட்ட நாயைக் காப்பதும் அந்த மனிதனின் கடமைதானே?
நாய்களால் உணவு, தண்ணீரை சுயமாக தேடிக் கொள்ள முடியுமா.. அவை முற்றிலும் தன்னை சுற்றியுள்ள மனிதர்களையே நம்பி வாழ்கின்றன... அதைக் காக்க வேண்டியதும் மனிதர்களின் கடமைதான்.
சட்டம் என்ன சொல்கிறது?
ஒவ்வொரு விலங்குக்கும் வாழும் உரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது. அந்தந்த பகுதி நிர்வாகங்கள், விலங்குகளின் நலனையும் காக்க வேண்டும் என்றே நீதித்துறையும் சொல்கிறது.
தெருநாய்களை கணக்கெடுத்து, சரியான வயதில் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு அவற்றுக்கு தடுப்பூசிகள் போட்டு பராமரித்தால் அவற்றால் பொதுவாக பிரச்சினைகள் வராது.
நாய்கள் அதிகம் இருக்கும் தெருக்களில் பல சமயங்களில் திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன செலவில்லாத பாதுகாவலர்களாக நமது இல்லங்களை காவல் காக்கின்றன.. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் உயர் ரக நாய்களையும் பலர் தங்களது ஆசைக்காகவும் சந்தோஷஷத்துக்காகவும் வளர்த்து விட்டு பிறகு தெருக்களில் விட்டு விடுவதால், அவற்றுக்கு கிடைக்கும் கவனிப்பும் அக்கறையும் நாட்டின தெருநாய்களை கிடைப்பதில்லை.
மேலும், லாபகரமான தொழில் என்று முறையான அனுமதியின்றி நாய்ப் பண்ணைகள் ஆங்காங்கு செயல்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆரோக்கியமான தெருநாய்கள், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப்பின் வேறு இடங்களில் கொண்டு போய் விடப்படுகின்றன. சரியான சுகாதாரத்துடன் அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதில்லை. மேலும் தொடர்ச்சியான பராமரிப்பும் வழங்கப்படுவதில்லை. பல நாய்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு கொடும் நோய் தொற்றுக்கு ஆளாவதாகவும் அவற்றுக்கு உணவளித்து பராமரிக்கும் ஆர்வலர்கள் கொட்டித்தீர்க்கிறார்கள்.
பல இடங்களில் தெருவோர நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் தாக்கப்படுவதாகவும் மிரட்டப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. ஆனால் அதையும் மீறியே அந்த வாயில்லாத ஆதரவற்ற ஜீவன்களுக்காக தன்னார்வலர்கள் பரமாரிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்களது சொந்தக் காசில்தான் இதையெல்லாம் செய்கிறார்கள். பல இடங்களில், இந்த நாய்களை நீங்கள் உங்கள் இடத்துக்கு கொண்டு போய் விடுங்கள் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். ஆனால் தன்னார்வலர்களால், எத்தனை நாய்களை பராமரிக்க முடியும்?
அரசு இந்த விஷயத்தில் சற்று தீவிர கவனம் செலுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளின் தன்னார்வலர்கள் மற்றும் விலங்குநல தொண்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு ABC எனப்படும் Animal Birth Control அறுவை சிகிச்சையை, நாய்களுக்கு முறையாக செய்து தர வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
மேலும் பல இடங்களில் தெருநாய்களைப் பிடிக்கும்போது, அதுதொடர்பான ஊழியர்கள் கையாளும் முறைகள் மிகவும் கொடுமையானதாக உள்ளது என்றும் அவையும் வாழும் உரிமையுள்ள உயிர்கள் என்று உணர்ந்து கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் விலங்கு ஆர்வலர்கள் கோருகிறார்கள்.
அரசு, மாநகராட்சி, நாய் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினையை பரிவான கண்ணோட்டத்துடன் அணுகினால் நிச்சயம் இதை தீர்க்க முடியும்.. நாய்கள் நன்றி உடையவை மட்டுமல்ல, அன்பானவையும் கூட.. அவற்றை அதே கண்ணோட்டத்தில் நாமும் பார்த்து சரியாக பராமரித்தால் நிச்சயம் கடிக்காது.. மாறாக, வாலைக் குழைத்துக் கொண்டு நம்மோடு துணை நிற்கும்.