வாழைப்பழத்தை எப்படி பழுக்க வைக்கணும் தெரியுமா.. இந்த பாட்டி சொல்றதைக் கேளுங்க!
சென்னை: இயற்கையான முறையில் பாரம்பரிய முறைப்படி வாழைப்பழங்களை பழுக்க வைக்கும் வயதான மூதாட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வயதான மூதாட்டியின் இந்த வீடியோ பயனுள்ளதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாழைப்பழத்தில் பல ரகங்கள் உள்ளன. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பி 2 மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. இயற்கையாகவே வாழைப்பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இப்படி சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் அனைத்து சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.
மலிவான ஊட்டச்சத்து மிகுந்த வாழைப்பழங்கள் பசியை போக்கும் நிவாரணியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக நாம் ஆகாரம் சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் உணவை எளிதில் ஜீரணிக்கும் உதவுகிறது. நாம் சாப்பிடும் போது ஏற்படும் பித்தத்தை போக்கவும் இந்த வாழைப்பழம் நமக்கு உதவியாக இருக்கிறன.
இது மட்டுமல்லாமல் ஆண்கள் செவ்வாழை பழங்களை தினமும் எடுத்துக் கொண்டால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழங்கள் மட்டுமல்லாமல் வாழை மரத்தில் உள்ள இலைகள், காய்கள், பூக்கள், தண்டுகள், என ஒவ்வொன்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இப்படி பல சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பழங்கள் நம் நாட்டில் அதிகம் உள்ளது.
தற்போது ரசாயனம் கலந்த செயற்கை முறையில் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் சந்தையில் நிறைய வருகின்றன. மேலும்
மரத்திலேயே பழங்களை பழுக்க விடாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு காய் காய்த்த உடனேயே செயற்கை முறையில் பழங்களாக மாற்றி சந்தையில் அதிகம் விற்று வருகின்றனர். செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள் என்று தெரியாமல் மக்கள் வாழைப் பழங்களை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு வாழைப்பழங்களை சாப்பிட்டும் எந்த சத்துக்களும் முழுமையாக கிடைப்பதில்லை.
இந்த நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் வாழைப்பழங்களை இயற்கையாக,
பாரம்பரிய முறைப்படி எப்படி பழுக்க வைக்கலாம் என்பது தொடர்பான ஒன்றை வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் முதலில் ஒரு குழியை தோண்டி அதை சுற்றி காய்ந்த வாழை இலைகளை அடுக்கி வைக்கிறார், பின்னர் அந்த காய்ந்த வாழை இலைகள் அடுக்கிய குழிக்குள் வாழைக்காய் தாரை உள்ளே வைத்து அதனுடன் சாண எரிவாயு மூலம் புகையிட்டு அதையும் குழிக்குள் வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த குழியின் மேலே காய்ந்த தென்னங்கீற்று இலைகளைக் கொண்டு மூடி, அதில் மணல்களை பரப்பி குழியை மூடுகிறார். இரண்டு நாட்கள் இந்த குழியை திறக்காமல் அப்படியே விட்டு விட வேண்டுமாம்.
இதன் பின்னர் வாழைப்பழங்களை எடுத்துப் பார்த்தால் முழுமையாக பழுத்து சாப்பிட தயாராக உள்ளது. வாழைப்பழங்களை வேதியியல் முறைப்படி இல்லாமல், இயற்கையாக ழுக்க வைப்பதற்கான அந்த மூதாட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பயனுள்ளதாக இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.