சொல்லாத இடம் கூட வேர்க்கின்றது, மனம் கூலான இடம் தேடி பறக்கின்றது.. பங்குனி வெயிலை சமாளிப்பது எப்படி?

Su.tha Arivalagan
Apr 02, 2024,06:04 PM IST

சென்னை: கோடை வெயில் தாக்கம் தொடங்கிவிட்டது.. வெளியில் தலை காட்ட முடியவில்லை. சுள்ளென்று தலையில் வந்து விழும் சூரியனின் வெம்மை தாங்க முடியவில்லை.. சுட்டெரிக்கும் வெயில், கூடவே அனல் பறக்கும் காற்று, கொட்டும் வியர்வை என்று மக்கள் கோடை காலத்தை சந்திக்க ஆரம்பித்து விட்டனர்.


சரி.. இதெல்லாம் இயற்கைதானே.. இதைத் தவிர்க்கவும் முடியாது இல்லையா.. ஆனால் இந்த வெப்பத்திலிருந்து சற்றே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.. எப்படி?




கோடை வந்தாலே நாம் முதலில் சந்திக்கக் கூடிய விஷயம் குடிநீர் பிரச்சனை. கட்டாயமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை தணிக்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். கண்டிப்பாக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். 


கோடை வந்தாலே கூடவே பள்ளி விடுமுறையும் வந்து விடும். தாத்தா பாட்டி வீடுகளுக்கோ அல்லது சுற்றுலாத் தலங்களுக்கோ செல்வது இயல்பானது. அப்படி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால், காலையிலோ அல்லது மாலையிலோ செல்ல வேண்டும். சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் நடமாடவோ, பிரயாணம் செய்வதையோ தவிர்க்க வேண்டும். 




வெளியில் செல்லும்போது கட்டாயம் குடையும், குடிநீரும் கொண்டு செல்ல வேண்டும். வெப்பத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான ஆடைகளை அணிய வேண்டும். அதிலும் குறிப்பாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.. அது ரொம்ப வசதியானதும் கூட.


கோடையில் கைக்குழந்தைகளை பாதுகாப்பது தான் சவாலான விஷயம். குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் சோர்வடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஈரத்துணியால் உடலை துடைத்து விட வேண்டும். வெயிலின் தாக்கம் வீட்டினுள் அதிகமாக இருந்தால் ஜன்னலிலும், வாசலிலும் ஈர துணிகளை தொங்கவிட வேண்டும் அப்போது வெயிலின் தாக்கம் ஓரளவு குறைய வாய்ப்புண்டு. குழந்தைகளை வெளியே எடுத்துச் சென்றால் கட்டாயம் தொப்பி அணிவிக்க வேண்டும். அந்தத் தொப்பி துணித் தொப்பியாக இருந்தால் நல்லது.




வெளியிலிருந்து குளிர்பானங்களை வாங்கிக் குடிப்பதை அறவே தவிர்க்கவும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் அடிக்கடி கொடுக்க வேண்டும். சாதாரண லெமன் ஜூஸ் கூட கொடுக்கலாம்.. ரொம்ப  ரொம்ப நல்லது. அவர்களுக்கு இந்த வெயிலில் உடலில் நீர் சத்துக்கள் குறைவாக இருக்கும். அதனால் நீர் சத்துக்கள் நிறைந்த பழங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக தர்பூசணி கரும்புச்சாறு கொடுக்கலாம்.


வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கணுங்க.. அது ரொம்ப முக்கியம். பெரியவர்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து ஐஸ் தண்ணி குடிப்பதை முற்றிலும் தவிருங்கள். ஒரு மண்பானையை வாங்கி வச்சுக்கங்க. மண்பானைத் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க நீர் சத்து நிறைந்த தர்பூசணி, இளநீர், நுங்கு ,சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடலாம். வெயில் சமயங்களில் அடிக்கடி மோர் குடிக்கலாம். 




வெயில் காலம் முடியும் வரை மாமிச  உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோழிக்கறி வேண்டவே வேண்டாம். உடல் சூட்டை அது அதிகரிக்கும். மாலை வேலைகளில் தேனீர், காபி குடிப்பதை விட இளநீர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் குடிப்பது நல்லது.


ஒவ்வொரு ஆண்டும் வெயில் வரத்தான் செய்யும். வரும் வெயிலை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும்.. இருப்பினும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கையில் தான் உள்ளது. இந்த ஆண்டையும் சந்தோஷமாக எதிர்கொண்டு.. ஜாலியாக சமாளிப்போம்.


கட்டுரை: சந்தனகுமாரி