Lunch box recipe: சர்க்கரை வள்ளிக் கிழங்கு பொடிமாஸ் (sweet potato பொரியல்).. சூப்பரா இருக்கும்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வீட்ல இரண்டு சர்க்கரை வள்ளிக் கிழங்கு சும்மா இருக்கு. என்ன பண்ணலாம்?.. அவிச்சு சாப்பிட்டு சாப்பிட்டு போரா இருக்கா.. கவலையை விடுங்க.. அதை வச்சு சூப்பரா ஒரு பொடிமாஸ் பண்ணி அசத்தலா சாப்பிடலம்.
என்னாது.. சர்க்கரை வள்ளிக் கிழங்குல பொடிமாஸா.. ஆமாங்கா.. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. செம மாஸா இருக்கும். வாங்க கிச்சனுக்குள்ள ஓடிரலாம்!
தேவையான பொருட்கள் :
1. சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 2
2. கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
3. கடுரு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1 ஸ்பூன்
4. பச்சை மிளகாய் - 2
5. இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
6. பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
7. கறிவேப்பிலை, மல்லித்தழை - 1 கைப்பிடி
8. உப்பு, காரம் - தேவைக்கு ஏற்ப
9. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
10. பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
செய்முறை :
1. சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு வாணலியில் தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி வேக வைக்கவும்.
2. பிறகு தோல் நீக்கி, தேவையான சைசிற்கு கட் செய்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து, வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும்.
4. பிறகு கட் செய்த கிழங்கை போட்டு கிளறவும்.
5. தேங்காய் துருவல், மல்லித்தழை போட்டு கிளறனால் சுவையான சர்க்கரை பள்ளிக்கிழங்கு பொடிமாஸ் கம கமவென ரெடி.
6. பொங்கல், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசியில் அனைத்து காய்கறிகளுடன் இதனையும் சமைப்பது நல்லது.
நன்மைகள் :
1. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது.
2. மலச்சிக்கல், குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
3. இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம்.
4. இதில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.
5. குழந்தைகளுக்கு இதனை மசித்துக் கொடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்