How to impress your wife?.. மனைவியை மகிழ்விக்க என்ன செய்யலாம்.. கணவர்களே இங்க வாங்க!
சென்னை: உலகத்திலேயே பெரிய கஷ்டம் எது தெரியுமா.. மனைவியை ஹேப்பியாக வைத்துக் கொள்வதுதான். ஆனால் அது ஒன்னும் அவ்வளவு ஹெவியான டாஸ்க் எல்லாம் இல்லைங்க.. சின்ன சின்ன கவனிப்பும், கூடுலான காதலும் போதுமானது.. கணவன் மனைவி உறவு பெஸ்ட்டாக நீடிக்க.
உங்கள் மனைவியை மகிழ்விக்க இங்கு சில யோசனைகளைச் சொல்றோம். பாலோ பண்ணிப் பாருங்க.. ஏதாவது நல்லது நடக்குதான்னு பார்ப்போம்.
1. அன்பும் அக்கறையும் - உங்கள் மனைவியிடம் அதிக அளவில் அன்பை வெளிப்படுத்துங்கள். கூடுதல் அக்கறையும் சேர்த்துக் கொடுங்கள். நிச்சயமாக அவருக்கு உங்கள் மீது பாசிட்டிவான எண்ணம் வரும்.
2. நேரம் செலவிடுங்கள் - மனைவிக்காக நேரம் செலவிடுங்கள். மனம் விட்டுப் பேசுவது, அவருடன் இணைந்து ஷாப்பிங் போவது (லைட்டா பண்ணா போதும்.. பெரிய கடை பக்கம் கூட்டிட்டுப் போய் பெரிய செலவா வச்சுட்டாங்கன்னா அதுக்கு எங்க கம்பெனி பொறுப்பாகாது!!), வாக்கிங் போவது.. ஜாலியாக படம் பார்ப்பது என டைம் செலவிடுங்கள். அவருக்கு உங்கள் மீதான பிடிப்பு அதிகமாகும்.
3. புரிந்துகொள்ளுங்கள் - உணர்வுகளைப் புரிந்து கொள்வதே சரியான உறவாக இருக்க முடியும். அந்த வகையில் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவரது உணர்வுகளுக்கு பொறுமையாக மதிப்பு கொடுங்கள். அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
4. உறவுகள் இறுக்கமாகட்டும் - மனைவியுடன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் நல்ல உறவை வளர்க்க முயலுங்கள். உறவுகள் இறுக்கமாகும்போது, அதன் பிணைப்பும் அழகாகும், ஆழமாகும்.
5. பாராட்டுங்கள் - மனைவி ஏதாவது நல்ல விஷயம் செய்தால் உடனே தயங்காமல் பாராட்டுங்கள், தட்டிக் கொடுங்கள், சிறிய பரிசுகளை கொடுக்கலாம் அல்லது அவர் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இது அவரை உத்வேகப்படுத்தும். பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிற விசேஷ தினங்களில் அவரை மகிழ்விக்க பரிசுகளை கொடுக்கவும்.
6. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் - பெண்களுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. காலையில் எழுந்தால் இரவு தூங்கப் போகும் வரை வேலைதான். அப்படிப்பட்ட நிலையில், அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. உங்களது மனைவியின் ஆரோக்கியத்தை நீங்கள்தான் கவனிக்க வேண்டும். அவர் ஆரோக்கியமாக இருக்க உதவுங்கள். அதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.
7. ஆதரவு தருங்கள் - உங்கள் மனைவியின் கனவுகளை ஆதரியுங்கள், அவரது முயற்சிகளுக்கு தன்னம்பிக்கை கொடுங்கள், ஊக்குவியுங்கள்.
8. உங்கள் மனைவிக்கு அவ்வப்போது சிறிய பரிசுகளை கொடுக்கலாம், அது பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, அவர் விரும்பும் பூ, பிடித்த உணவு என்று சிம்பிளாக கொடுக்கலாம். கொஞ்சம் தனிமையாக உங்கள் மனைவியுடன் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இது உங்கள் உறவுகளைப் பலப்படுத்த உதவும்.
9. மனைவியின் விருப்பங்களைப் பற்றி அக்கறை காட்டுங்கள். சிறிய விஷயங்களைக் கூட கவனியுங்கள், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்க்கவும். சமூக சேவைகள் அல்லது தன்னார்வப்பணி போன்றவற்றில் அவர் விரும்பினால் பங்கேற்க உதவுங்கள். அவருக்குப் புதிதாக ஏதாவது கற்றுக் கொடுங்கள். அல்லது அவர் கற்றுக் கொள்ள விரும்பினால் அதை ஊக்குவியுங்கள்.
10. அடிக்கடி ஐலவ்யூ சொல்லுங்க. உங்களின் அன்பை அவருக்கு அவ்வப்போது தெரிவியுங்கள்: அடிக்கடி அவரிடம் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்லுங்கள். இது அவருக்கு மனநிறைவு தரும்.
11. கணவர்களும் சமைக்கலாம். அதில் தவறே இல்லை. உங்களுக்கு சமையல் தெரிந்தால், அவருக்குப் பிடித்ததை செய்து கொடுங்க. அன்பை சமையல் திறமை மூலமாகவும் காட்டலாம். இது அவருக்கும் ஒரு மாற்றமாக இருக்கும். அதேபோல வீட்டு வேலைகளை செய்து அவருக்கு உதவுங்கள். இது அவரை ரிலாக்ஸ் ஆக்கும்.
12. அவருடனான சந்தோஷமான நினைவுகளை உருவாக்குங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இணைந்து கிளம்பி, புதிய இடங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் அல்லது பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கக் கூடிய இடங்களுக்குச் செல்லலாம்.
13. ஒவ்வொருவருக்கும் பிரைவசி உண்டு. அவருக்கும் தனிப்பட்ட நேரம் கொடுக்கவும். அவருடைய விருப்பங்களை புரிந்து, அவர் தனியாக நேரம் செலவிட வேண்டும் என்றால் அது குறித்து புரிந்து கொண்டு அதை ஆதரியுங்கள்.
14. மனைவியுடன் ஆசையுடன் பேசுங்கள். அவர் விவாதிக்க விரும்பும் விஷயங்களில் ஆர்வத்துடன் அவரையும் சேர்த்து பேசுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது, இருவரும் ஆளுக்கு ஒரு சமையல் செய்து ஜாலியாக போட்டி வைப்பது என்று மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்.
இப்படி சின்னச் சின்னதாக ஏதாவது செய்து கொண்டே இருங்கள். வாழ்க்கை என்பதே ஓட்டம்தான்.. ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.. நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் சேர்ந்து ஓடி வரும் துணையையும் மகிழ்வித்தபடி ஓட வேண்டியது முக்கியமாகும். உங்கள் ஒவ்வொரு நாளின் நினைவுகளையும் டைரி போல குறித்துக் கொண்டே வாருங்கள்.. பின்னாளில் அதைப் படிக்கும்போது அழகான திரைப்படம் போல அது மனதை மயக்கும்.
Life is beautiful.. just enjoy!