இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!
சென்னை: பார்க்கத்தான் தம்மாத்துண்டா இருக்கு.. ஆனால் அது செய்யும் சேட்டை இருக்கே.. ஆத்தாடி ஆத்தா.. நிம்மதியா ஒரு நிமிடம் கூட தூங்க முடியாதுங்க.. அப்படி ஒரு டார்ச்சர்தான் இந்த கொசு.
குறிப்பாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பக்கூடியவை என்பதால், கொசுக்களோடு கண்டிப்பாக நம்மால் குடும்பம் நடத்த முடியாது. மாறாக அதை ஒழிப்பதுதான் முக்கியமானது.. அவசியமானதும் கூட. அதேசமயம், கொசுக்களை விரட்ட சரியான முறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.
இன்று, பலருமே கெமிக்கல் அடிப்படையிலான கொசு விரட்டும் திரவங்களை (Mosquito Repellents) பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது உடலுக்கு தீங்கிழைக்கும் வாய்ப்பு அதிகம். இதுபோக கொசு வலை இருக்கு, கொசு பேட்டும் கூட வந்தாச்சு.. ஆனாலும் கூட இவையெல்லாம் ஓரளவுக்குத்தான் உதவுகின்றன.
எனவே, இயற்கை முறைகள் மற்றும் பாரம்பரிய வழிகள் மூலமாக கொசுக்களை எளிதாக கட்டுப்படுத்தலாம். அது பற்றிப் பார்ப்போம்.
1. வீட்டை சுத்தமாக வைத்தல்
முதலில் வீட்டையும், வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொசுக்களுக்கு மிக முக்கியமான உயிர் வாழுமிடம் மற்றும் கொசு முட்டைகள் அதிகம் உற்பத்தியாகும் இடம் நீர்தான். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள் தோறும் கொசுக்கள் ராஜ்ஜியம்தான். எனவே வீட்டு வளாகத்தில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளியலறை, கழிப்பறைகள், தண்ணீர் தொட்டி போன்ற இடங்களில் நீர் தேங்காமல் இருக்கச் செய்ய வேண்டும். வீட்டை நாள்தோறும் சுத்தப்படுத்தி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் துளசி, வேப்பிலை அல்லது வேப்பிலை பேஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். நல்ல பலன் தரும்.
2. இயற்கை கொசு விரட்டும் வழிகள்
கொசுக்களை விரட்டுவதற்கு நமக்கு அருகில் கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேப்பிலை (Neem Leaves) மற்றும் வேப்பெண்ணெய் (Neem Oil)
- வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து, தேலில் தடவி, கொசுக்களை விரட்டலாம். வேப்பிலையைத் தூளாக அரைத்து, வீட்டின் மூலைகளில் தூவினால், கொசுக்கள் நெருங்காது.
துளசி (Tulsi) மற்றும் மரிக்கொழுந்து (Citronella) எண்ணெய்
- துளசி செடிகள் வீட்டில் வளர்த்தால், அவை கொசுக்களை விரட்ட உதவும். மரிக்கொழுந்து எண்ணெயை ஒரு சிறிய தீபத்தில் விட்டு மூடிய அறையில் வைத்து விட்டால், கொசுக்கள் அருகில் வராது.
நார்த்தங்காய் (Lemon) மற்றும் லவங்கப்பட்டை (Clove)
- ஒரு நார்த்தங்காயை வெட்டிக் கொண்டு, அதற்குள் லவங்கம் (Clove) உட்பொதிந்து, வீட்டின் பல்வேறு இடங்களில் வைக்கலாம். இதன் வாசனை கொசுக்களை தூரமாக வைத்திருக்கும்.
3. புகை மற்றும் மூலிகை
கொசுக்களை விரட்டும் மற்றொரு பாரம்பரிய முறை சிறப்பு மூலிகைகளை சுட்டு புகை மூட்டம் போடுதல். ஆனால் அலர்ஜி உள்ளோருக்கும், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளோரும் இதைத் தவிர்ப்பது நல்லது.
- வேப்பிலை அல்லது சாம்பிராணி (Sambrani) பொடி கொண்டு வீட்டில் புகை போடலாம். தேங்காய் ஓடு எரித்த புகை மிகவும் சிறப்பான கொசு விரட்டும் இயற்கை வழியாகும்.
4. கொசு வலை மற்றும் இயற்கை திரவங்கள்
கொசு வலைகள் (Mosquito Nets) அதிக அளவில் பயன்படுத்தலாம். தூங்கும் போது பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கொசு வலையில் ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் வழியாக புகும் கொசுக்கள் உங்களை உண்டு இல்லை என்று செய்து விடும்.
அதேபோல, மின்னணு கொசு கொல்லிகள் (Electric Mosquito Repellent) இல்லாமல், எண்ணெய் மற்றும் மூலிகை கலவைகள் பயன்படுத்தி இயற்கையான முறையிலும் விரட்ட முயற்சிக்கலாம்.
5. மூலிகை செடிகள் வளர்க்கலாம்
துளசி (Tulsi), வேப்பிலை மரம் (Neem Tree), மரிக்கொழுந்து செடி (Citronella Plant), கற்பூரவள்ளி (Indian Borage), புதினா (Mint Plant) போன்ற மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இவையும் கூட கொசுக்களை விரட்ட இயற்கையாகவே கை கொடுக்கும்.
6. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம்
வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்க வேண்டும். ஈரப்பதமாக இருக்கக் கூடாது. கொசுக்கள் பொதுவாக காற்று நுழையும் இடங்களில் அதிகம் வாழ முடியாது. எனவே நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருப்பது போல அறைகள் இருக்க வேண்டும். அதேபோல அறைகளில் தேவையில்லாமல் குப்பை போல துணிகள் குவிந்திருப்பதையும் தவிருங்கள். துணிகள் குவியல் குவியலாக கிடந்தால் அதற்குள்ளும் கொசுக்கள் போய் ஒளிந்து கொண்டு இரவில் வந்து தொல்லை தரும்.
வீட்டுக்குள்ளும், வீட்டைச் சுற்றியும் சுத்தமாக இருந்தாலே பாதி பிரச்சினையை தீர்த்து விடலாம்.