அந்தப் பக்கமும் வெயிலு.. இந்தப் பக்கமும் வெயிலு.. வாங்க.. வெண்பூசணி தயிர் பச்சடி சாப்பிடலாம்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: திரும்பிய பக்கமெல்லாம் திகுதிகுவென வெயில் வெளுத்து வாங்குகிறது. ஜன்னலைத் திறந்து வைத்தால் காற்று வரவில்லை.. மாறாக சுடச் சுட ஆவி பறக்கும் வெயில்தான் விசிட் அடிக்கிறது.
இப்பவே இப்படின்னா மார்ச் தாண்டிட்டா வெளுத்து வாங்கப் போகும் வெயிலை நினைச்சு இப்பவே பயமா இருக்குங்க. சரி அதை விடுங்க.. நாம வேற பக்கமா போவோம்.
கோடைக்காலம் என்றாலே சில்லென்று குடிக்க குளிர்பானங்களும், ஐஸ்கிரீம் வகைகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இவை அனைத்தும் அப்போதைய சுவைக்கு மட்டுமே தவிர உடல் சூட்டை தணிக்காது. அதற்கு ஒரு அருமையான எளிமையான விலை மலிவான வெண்பூசணி வைத்து ஒரு தயிர் பச்சடி செய்வோம் வாருங்கள் பிரண்ட்ஸ்
வெண்பூசணி தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்
வெண்பூசணி 250 கிராம்
பச்சை மிளகாய் ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
மா இஞ்சி சிறிதளவு
கருவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
தக்காளி ஒன்று
கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு
இந்து உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1.வெண்பூசணி தோல் நீக்கி விதைகள் நீக்கி நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும்.
2.ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி வெண்பூசணியை வேக வைக்கவும் .சிறிது உப்பு போடவும்.
3.அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
4.அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,பெரிய வெங்காயம், மா இஞ்சி பொடியாக நறுக்கியது ஒவ்வொன்றாக போடவும்.
5. இவை அனைத்தும் சூடு ஆறிய பிறகு ஒரு கப் தயிர் சேர்க்கவும் .பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும் .கருவேப்பிலை மல்லித்தழை தூவவும். உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
6. அருமையான சுவையான வெண்பூசணி மா இஞ்சி தயிர் பச்சடி ரெடி.
இதனுடைய பயன்கள் என்ன என்று பார்ப்போமா!
1. Ash gourd என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சாம்பல் பூசணி அல்லது வெண்பூசணிக்கு மகா பிராணா என்ற பெயரும் இதற்கு உண்டு.
2. வைட்டமின்கள் ,தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளது.
3. புரதம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
4. எல்- டிரிப டோபான் உள்ளது. இது உடலால் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய அமினோ அமிலம் .
5. மன அழுத்தத்தை போக்கும் .உடல் எடை குறைக்க உதவுகிறது. ரத்தத்திற்கு நல்லது.
6. நீரிழிவு மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பல கடுமையான உடல்நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் .செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
7. பெண்களின் வெள்ளைப் போக்கு நீங்கும். உடற்பயிற்சி செய்பவருக்கு இது எலக்ட்ரோலைட்க்கு சமமானது.
இத்தனை பயன்கள் உள்ள வெண்பூசணியை உடனே வாங்கி இப்படி செய்து பாருங்கள் .மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.