மட்டன் சுக்கா தெரியும்.. அதை விடுங்க பாஸ்..  முட்டை சுக்கா சாப்பிட்டு இருக்கிங்களா?

vanitha
Mar 19, 2024,05:31 PM IST

சென்னை:  வணக்கம்.. அன்பு தோழிகளே.. இன்னிக்கு செவ்வாய்க்கிழமைதான்.. சொல்லக் கூடாதுதான்.. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கங்க.. இன்னிக்கு இல்லாட்டியும் நாளைக்கு சாப்பிடலாம்ல!


ஆமா, முட்டை பிரியரா நீங்கள்? அப்ப இந்த ரெசிபி உங்களுக்குத்தான். நான்வெஜ் சாப்பிடாத பல பேர் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவாங்க. அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது முட்டையில். உடற்பயிற்சி செய்றவங்க, பாடிபில்டர்ஸ் எல்லாம் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு  முட்டை வரை கூட எடுத்துக்குவாங்க.




குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்தா அவங்க ஹெல்த்துக்கு ரொம்ப நல்லதுங்க. முட்டையில பல வெரைட்டியான உணவுகள் செய்யலாங்க. இன்னைக்கு நான் முட்டையை வைத்து சுக்கா ரெசிபி தாங்க சொல்ல போறேன்.. முட்டை சுக்கா எப்படி செய்யலாம்னு பார்ப்போங்க.


தேவையான பொருட்கள்:


முட்டை -5 

சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் -1 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் -1 ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

கருவேப்பிலை -  சிறிதளவு

சீரகம் - 1 ஸ்பூன்

கடுகு உளுந்து  - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

உப்பு -  தேவைக்கேற்ப


செய்முறை: 




முதலில் முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் கலக்கிய முட்டை கலவையை ஊற்றி மூடி போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.


பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடானதும், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும், பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறியதும் முட்டை துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் அடுப்பை வைத்து வேக விடவும்.




கடைசியாக கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கவும். அருமையான சுவையில் முட்டை சுக்கா ரெடி! பன்னீர் துண்டுகள் போல ரொம்ப சாப்டா இருப்பதால் முட்டை சாப்பிட அவ்ளோ நல்லா இருக்குங்க. சூடான சாதத்துடன் இந்த கலவையை பிசைந்து சாப்பிட்டால் ருசி நன்றாக இருக்கும். மேலும் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் இந்த முட்டை சுக்கா காம்பினேஷன் நன்றாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க!


நெக்ஸ்ட் அனதர் ரெசிப்பியோட மீட் பண்றேன்... பை! பை!