"கத்திரிக்காய், முருங்கைக்காய், பாவைக்காய்".. எல்லாஞ் சரி.. அதுல உள்ள "ஆபத்து" தெரியுமா?

Su.tha Arivalagan
Jul 27, 2023,04:23 PM IST
- மீனா

"ஆத்தாடி.. இந்த தக்காளி  கெட்ட கேட்டுக்கு கொஞ்சமாச்சும் இறங்கி வந்துச்சா பாரு.. அப்படியே முறுக்கிட்டு இருக்கு இன்னும் விலை குறையாம.. அலுத்துக் கொண்டேதான் காய்கறிகளை வாங்கி வந்து கிச்சனில் கொட்டிக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

தக்காளிக்குப் போட்டியாக சின்ன வெங்காயம் விலை சந்திரயான் 3 போல விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது. எந்தக் காயைத் தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.. விலைவாசி அப்படி இருக்கு.. ஆனால் அதெல்லாம் விட பெரிய மேட்டர் ஒன்னு இருக்குங்க.. அது என்ன தெரியுமா..  தெரியணும்னா தொடர்ந்து படிங்க. 



காய்கறிகள் வாங்கறோம் இல்லையா.. கூடவே நாம் ஆபத்தையும் சேர்த்தேதான் வாங்கி வருகிறோம். அது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை.   ஆரோக்கியமாக வாழ்வதற்கு யாருக்கு தாங்க ஆசை இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு காய்கறிகளும் பழங்களும் அவசியமானதாக உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும் என்பது, நாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தான் உணவில் அதிக அளவு காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அனைத்து மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். 


ஆனால் தற்போதிருக்கும் சூழ்நிலையில் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம்  என்பது சாதாரணமாகிவிட்டது. இந்த அவசர உலகத்தில் இதனை சோதித்துப் பார்த்து வாங்குவதற்கு நமக்கு நேரமும் இல்லை, போதுமான அளவிற்கு விழிப்புணர்வும் இல்லை என்பது கசப்பான உண்மை தான். இயற்கையான முறையில் விளைவிக்கக் கூடிய காய்கறி பழங்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதானதாகிவிட்டது. அப்படி இயற்கை முறையில் விளைவிக்க கூடிய காய்கறிகள் ஆர்கானிக் என்ற பெயரில் நமக்கு கிடைத்தாலும் அதன் 
விலையோ மிகவும் அதிகமாக உள்ளதால் எல்லாராலும் வாங்க முடியும் என்பது சாத்தியமற்ற ஒன்று. 



தற்போது கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களால் பட்டைத் தீட்டப்பட்டவைதான். எனவே அவற்றை நாம் சாப்பிடும் போது பூச்சிக்கொல்லியின் நச்சும் நம் உடலில் கலந்து நமக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். ஆனால் நம்மால் காய்கறி, பழங்கள் சாப்பிடாமல் இருக்க முடியாதே.. உண்மைதான்.. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.. ஆனால் சாப்பிடுவதற்கு முன் அவற்றில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உரிய முறையில் நீக்க வேண்டும்.  அது மிக மிக முக்கியம்.

"சரி, எப்படி அதை நீக்க முடியும்.. அது எனக்குத் தெரியாதே"

அதைத்தான் நாங்க இப்போ சொல்லப் போறோம். காய்கறி பழங்களை பூச்சிக்கொல்லிகள் இல்லாத பாதுகாப்பான உணவாக மாற்றுவதற்கு சில வழிகள் உள்ளன. என்னான்னு பார்ப்போமா.

தண்ணீரில்  கழுவுதல்:

மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறி பழங்களை நாம் ஒரு நிமிடமாவது நல்ல தண்ணீரில்  நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் சுத்தம் செய்யும் போது அதன் மேற்பரப்பில் உள்ள அசத்தங்களை 45 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீக்க முடியும்.
 


உப்புத் தண்ணீரில் கழுவுதல்:

காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் 20 நிமிடமாவது ஊறவைத்து எடுத்து அதை  மறுபடியும் சாதாரண நல்ல தண்ணீரில் கழுவி விட்டு நாம் பயன்படுத்தினோம் என்றால் அதன் மேல் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகள்  கிட்டத்தட்ட 80%  சதவீதம் நீக்கப்படும்.

வினிகர் கலந்த தண்ணீரில் கழுவுதல்:

ஒரு பங்கு வினிகருக்கு, நான்கு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் இந்த கரைசலை தயார் செய்து காய்கறிகள், பழங்களை பாத்திரத்தில் போட்டு அதன் மீது 20 நிமிடங்கள் ஊற்றி ஊறவைத்து அதை சுத்தம் செய்து பயன்படுத்தும் போது அதில் உள்ள பூச்சிக்கொல்லிகள் 80% சதவீதம் நீக்கப்படும்.



பேக்கிங் சோடா பயன்படுத்தி கழுவுதல்:

நம் உணவில் உள்ள ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்குவதற்கு மிகவும் எளிதான மற்றும் சிக்கனமான வழிகளில் ஒன்று இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை இரண்டு கப் தண்ணீரில் கலந்து, இந்தக் கரைசலில் காய்கறி பழங்களை கழுவும் போது அவற்றில் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகள் 90% முதல் 95% வரை நீக்கப்படுகிறது.

எலுமிச்சை சாறு+ஒயிட் வினிகர் +தண்ணீர் கலந்த கரைசல்:

இந்த முறையும் நாம் பின்பற்றக்கூடிய சுலபமான முறை தான். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு ஸ்பூன் ஒயிட் வினிகர் இரண்டு கப் தண்ணீர் மூன்றையும் கலந்து இந்த கரைசலை, காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது தெளித்து 20 நிமிடம் கழித்து நன்றாக கழுவி பயன்படுத்தும் போதும் 90% முதல் 95% வரை பூச்சிக்கொல்லி என்னும் இரசாயனம் நீக்கப்படுகிறது.

மஞ்சள் தூள் கரைசல்:

மஞ்சள் என்பது உணவுகளை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பழமையான ஒரு முறையாகும். மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பது நாம் எல்லாரும் அறிந்ததே. ஒரு டீஸ்பூன் மஞ்சளை தண்ணீரில் கலந்து அதில் காய்கறி பழங்களை ஊறவைத்து கழுவி பயன்படுத்தினாலும் அதில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் .





தோலை அகற்றுதல்:

பல காய்கறி பழங்களில் தடிமனான தோல்கள் உள்ளதாலும் அவற்றில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் படிந்துள்ளதாலும் அவற்றை நாம் ஆரோக்கியமாக பயன்படுத்துவதற்கான சிறந்த வழி என்றால் அதன் தோலை நீக்குவது தான். அதை அகற்றி விட்டு சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது.

மெழுகு பூச்சை  அகற்றுதல்:

மெழுகு பூச்சுடன்  காணப்படும் பழம் என்றா��் அது பெரும்பாலும் ஆப்பிள்தான். எனவே வாங்கியதும் அதை அப்படியே வாயில் போட்டு கடித்துத் தின்னக் கூடாது. முதலில் மெழுகு பூச்சை அகற்ற வேண்டும். கத்தியால், அல்லது நம்முடைய நகத்தினால் கீறி பார்த்தாலே தெரிந்து விடும் அதில் மெழுகுப் பூச்சு இருக்கா இல்லையான்னு. இருந்தால் தோலை எடுத்து விட்டு சாப்பிடலாம். 

பிளான்ச்சிங் முறை:



பிளான்சிங் முறை என்பது ஒரு பிரெஞ்சு சமையல் செயல் முறையாகும். இந்த முறையில் க��ய்கறி பழங்கள் தீவிர வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும். காய்கறி பழங்களை சுத்தப்படுத்துவதற்கு, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த காய்கறி பழங்களை ஒரு நிமிடம் ஊறவைத்து எடுத்து பிறகு குளிர்ந்த நீருக்கு உடனே மாற்றவும். இந்த முறையை பின்பற்றினால் காய்கறி பழங்களை அதிக நாள் ஸ்டோர் செய்து வைத்து நம்மால் பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் அதில் உள்ள பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

என்னங்க இப்ப கிளியர் ஆயிருச்சா.. இவ்வளவு முறைகளில் ஏதோ ஒன்றாவது நாம் பயன்படுத்தி நாம் உட்கொள்ளும் காய்கறி பழங்களை சுத்தப்படுத்தி நாம் அதை உண்ணும் போது நமக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உண்டாகும் தானே.

கட்டுரை + புகைப்படங்கள்: மீனா