கத்தியால் குத்திய நபரை போராடி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்த சைப் அலிகான்.. தப்பியது எப்படி?
மும்பை: தனது வீட்டுக்குள் புகுந்து தன்னைக் கத்தியால் குத்திய நபரை வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து போராடி பிடித்து பாத்ரூமுக்குள் அடைத்து வைத்துள்ளார் நடிகர் சைப் அலிகான். ஆனால் அந்த நபர் பாத்ரூமின் வென்டிலேட்டர் வழியாக தப்பி வெளியேறியது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவரான சரிபுல் இஸ்லாம் செசியாத் என்ற நபர் மும்பையில் உள்ள சைப் அலிகான் வீட்டுக்குள் புகுந்து பெரும் ரணகளம் ஆக்கி விட்டார். அவர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சைப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் தற்போது வீடு திரும்பி விட்டார்.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஷரிபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில்தான் தான் தான் சைப் அலிகானை குத்தியதாக ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்களிலிருந்து வெளியானவை:
சைப் அலிகானைக் குத்தித் தாக்கி விட்டு தப்பிய ஷரிபுல் முதலில் ஹவுரா செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து வங்கதேசத்திற்குள் தப்பி ஓடும் நோக்கில் அவர் இருந்துள்ளார். இதற்காக ஹவுராவுக்கு ரயில் டிக்கெட் எடுக்க டிக்கெட் ஏஜென்டுகளை அணுகியுள்ளார். இதற்கான பணத்துக்காக அவர் திட்டமிட்டு வந்தார். ஆனால் அதற்குள் போலீஸிடம் சிக்கி விட்டார்.
சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை ஷரிபுல்லை நேரில் சைப் அலிகான் வீட்டுக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டக் கூறியுள்ளனர் போலீஸார். அதன்படி தான் என்னவெல்லாம் செய்தேன் என்பதை நடித்துக் காட்டியுள்ளார் ஷரிபுல். சம்பவத்தன்று நடிகர் சைப் அலிகான் வசித்து வரும் 12 மாடிக் கட்டடத்தின் சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே நுழைந்துள்ளார் ஷரிபுல். உள்ளே வாட்ச்மேன் எல்லோரும் தூக்க நிலையில் இருந்ததைப் பயன்படுத்தி பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி சைப் அலிகான் வீட்டுக்கு வந்துள்ளார். ஏசி மெஷின் பொருத்தப்பட்டிருந்ததைக் கழற்றி விட்டு அதன் வழியாக பாத்ரூமுக்குள் புகுந்துள்ளார். சத்தம் வராமல் இருப்பதற்காக தனது ஷூவைக் கழற்றி பையில் போட்டுள்ளார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
பாத்ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்தபோதுதான் வீட்டு பணிப் பெண் பார்த்து சத்தம் போட்டுள்ளார். அதன் பின்னர் சைப் அலிகான் உள்ளிட்டோர் வரவும் சண்டை நடந்துள்ளது. சைப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் சைப் அலிகானும் மற்றவர்களும் சேர்ந்து அந்த நபரை பாத்ரூமுக்குள் அடைத்து வெளியே கதவைப் பூட்டியுள்ளனர். ஆனால் தான் உள்ளே வந்த அதே வென்டிலேட்டர் வழியாகவே ஷரிபுல் வேகமாக வெளியேறி தப்பி விட்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்