பழங்கள் அதிகமாக சாப்பிடலாமா அல்லது அதற்கும் அளவு உண்டா?

Su.tha Arivalagan
Sep 04, 2023,02:53 PM IST
- மீனா

பொதுவாகவே பழங்கள் சிறந்த உணவாகவே எப்போதும் கருதப்படுகிறது. ஏனென்றால் அதில் விட்டமின்ஸ் , ஃபைபர், நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்  அடங்கியிருக்கின்றன. இதை நாம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு தேவையான ஆற்றலையும், சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுடைய மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. 

சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பழங்களை எடுத்துக் கொள்ளும் போது அந்த சத்து அவர்களுக்கு கிடைக்கச் செய்து, அவர்களுடைய குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது.  பழங்காலங்களில் இருந்து பல்வேறு வகையான நோய்களை குணமாக்க சில பழங்களை மருந்தாக கூட 
பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக புற்றுநோயிலிருந்து கூட நம்மளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு பழங்களுக்கு உண்டு என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 



அதேசமயம், இவ்வாறு பல நன்மைகள் இருக்கும் பழங்களை நாம் எப்பொழுதும் அளவோடு எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஏனென்றால் எந்த ஒரு உணவிலும் அளவு என்பது மிகவும் முக்கியமானது. அது அளவுக்கு அதிகமாக போகும் போது  எதிர்மறையான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தி விடும். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு "என்ற பழமொழி நாம் யாவரும் அறிந்ததே .அது பழங்களுக்கும் பொருந்தும். எதையும் அதிகமாக நாம் உட்கொள்ளும் போது அது தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். உதாரணத்திற்கு தண்ணீர் நம் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதது என்பது நமக்கு தெரியும். ஆனால் அதில் கூட அளவு இருக்கிறது. 

தண்ணீர் நாம் அதிகமாக பருகும் போது நம் சிறுநீரகம்  இயல்பை  மீறி அதிகமாக செயல்பட வேண்டி இருப்பதால் அதுவும் கூட ஒரு பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதைப்போலத்தான் இந்த பழங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் பல வித மாற்றங்களையும் உண்டு பண்ணுகிறது. டயட்டில் இருப்பவர்கள் கூட தன் உடல் எடை கூடாமல் இருப்பதற்கு பழங்களை எடுத்துக் கொள்வார்கள் . ஆனால் பழங்களை அதிகமாக எடுக்கும் போது எடை குறையாமல் எடை கூடத்தான் செய்யும். ஏனென்றால் அதில் உள்ள சக்கரை அளவு நம் உடலினுள் அதிகமாக செல்லும்போது அது நமக்கு எதிர்வினையை ஏற்படுத்தி விடும். 

ஒரு நாள் ஒரு ஆப்பிள் நாம் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்கும் நிலையை தள்ளி வைக்கலாம் என்ற கூற்று உண்டு. ஆனால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு நாம் இரண்டு  ஆப்பிள்களுக்குமேல் எடுக்காமல் இருப்பதே சிறந்தது. மொத்தத்தில் ஒரு நாளைக்கு 1 அல்லது 1 1/2 கப் பழங்கள்  கலவையை உட்கொண்டாலே போதுமானது. ஒரே பழத்தை அதிகமாகவும் எடுத்துக் கொள்ளாமல், வேறு வேறு பழங்களையும் நாம் சீரான முறையில் எடுத்துக் கொள்வதே நல்லது . ஒரே பழத்தில் எல்லா சத்துக்களும் கிடைப்பதில்லை. வேறு வேறு பழங்களை நாம் எடுத்துக் எடுத்துக்கொள்ளும்  போது நம்ம உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும்  அந்த பழங்களிலிருந்து பெற முடியும். 



அதேசமயம், ஆரோக்கியமானது தானே என்று நாம் அதிகமாக பழங்களை சாப்பிடும் போது அது நம் ஆரோக்கியத்தை கெடுப்பதாக கூட மாறிவிடலாம். அதையும் மீறி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது எடை அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு, பல் சிதைவு , வாய்வு தொல்லை , அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

சில பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் சர்க்கரையும், கலோரியும் அதிகமாக உள்ளதால் அதை நாம் எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழங்களை அதிகம் சாப்பிடும்போது அது வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்து இதனால் வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. சிட்ரஸ் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளும் போது, வாயில் கெட்ட பாக்டீரியா வை உற்பத்தி செய்து அதுவே பல் சிதைவுக்கு காரணம் ஆகி விடுகின்றது. 

அதனால் ஆரோக்கியம் என்று கருதி அதிகமாக பழங்களை எடுத்துக் கொள்ளாமல்  அளவோடு எடுத்துக்கொண்டால், நம் ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் வராது .