காங்கிரஸ் - ஆம் ஆத்மி பஞ்சாயத்து.. தீர்த்து வைத்த மமதா பானர்ஜி, நிதீஷ் குமார்
Jul 17, 2023,12:46 PM IST
பாட்னா: டெல்லி அரசுக்கு எதிரான மத்தியஅரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்ததன் பின்னணியில், திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மமதா பானர்ஜி இருப்பதாக கூறப்படுகிறது.
அவசரச் சட்டத்தை எதிர்க்கும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே பூசல் இருந்து வந்தது. இதனால் இன்றைய பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி வருமா என்ற சந்தேகமும் நிலவியது. இந்த நிலையில்தான் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக நேற்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டது.
காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே நிலவி வந்த பிரச்சினையை சரி செய்தது மமதா பானர்ஜியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும்தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த பாட்னா கூட்டத்திலேயே இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. அப்போதும் மமதா பானர்ஜிதான் தலையிட்டு சமரசம் செய்தார். இப்போதும் அவரே இரு தரப்பிடமும் பேசி சரி செய்துள்ளாராம்.
காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்பு கொண்ட மமதா பானர்ஜி, டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவிடமே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.இதேபோல நிதீஷ் குமாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.