இஸ்ரேலின் " Iron Dome system" தகர்ந்தது எப்படி?.. உலகை அதிர வைத்த ஹமாஸ் மாஸ்டர் பிளான்!
டெல் அவிவ்: இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இப்படி ஒரு அதிரடியான, அதி வேகமான, திட்டமிட்ட தாக்குதலை இதுவரை இஸ்ரேல் மீது யாரும் தொடுத்தது இல்லை. அதுதான் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேலை மிரள வைத்துள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் மீதான அத்தனை பிம்பங்களும் தரைமட்டமாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருதுகிறார்கள். காரணம் தனது நாட்டை யாரும் தாக்கி விடாதபடி Iron Dome system பாதுகாப்புத் திட்டத்தை பல ஆண்டுகளாக வைத்திருக்கிறது இஸ்ரேல். அந்த Iron Dome system திட்டத்தையே ஹமாஸ் ஏவிய ஆயிரக்கணக்கான ஏவுகணைகளும் தவிடு பொடியாக்கி விட்டன. இது எப்படி நடந்தது என்பதுதான் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
இதுவரை இஸ்ரேலிய மக்கள் இப்படி ஒரு தாக்குதலை தங்களது நாட்டுக்குள் சந்திதத்தில்லை. இப்படி உயிருக்குப் பயந்து அவர்கள் ஓடியதே இல்லை. அதிகப்படியான உயிரிழப்புகளையும் இஸ்ரேல் சந்தித்ததும் இல்லை. எல்லா வகையிலிம் ஹமாஸின் இந்தத் தாக்குதல் இஸ்ரேலை உலுக்கி எடுத்து விட்டது. கூடவே இஸ்ரேலின் மிகப் பெரிய ஆதரவாளரான அமெரிக்காவும் அதிர்ந்து போயுள்ளது. இஸ்ரேல் அடி வாங்கினால் அமெரிக்காவுக்குத்தான் அதிகம் வலிக்கும். எனவேதான் அமெரிக்காவும் தற்போது கோபமடைந்துள்ளது.
யார் இந்த ஹமாஸ்?
பாஸ்தீன விடுதலைக்காகவும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடவும் எத்தனையோ அமைப்புகள் அங்கு தோன்றின. ஹமாஸ், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா என்று பல இயக்கங்கள் தோன்றின. இதில் யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அவரது மறைவுக்குப் பிறகு கரைந்து போய் விட்டது. ஹமாஸ் மட்டுமே தற்போது பாலஸ்தீனப் பகுதியில் தொடர்ந்து வேகமாக செயல்பட்டு வருகிறது. மற்ற இயக்கங்கள் போல ஹமாஸ் இயக்கத்தினர் கண் போன போக்கில் எதையுமே செய்ய மாட்டார்கள்.
காரணம், இஸ்ரேலை ஆயுத பலத்தால் மோதி வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இஸ்ரேலை உளவியல் ரீதியாகத்தான் நிலை குலைய வைக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியம். பிற போராளி இயக்கங்களை விட ஹமாஸ் இயக்கத்தில் புத்திசாலித்தனமாகவும் செயல்படுவார்கள். அந்த வகையில்தான் தற்போதைய தாக்குதலையும் மிக மிக நேர்த்தியாக திட்டமிட்டு மிக மோசமான தாக்குதலாக திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இஸ்ரேலுக்குள் புகுந்து நான்கு பேரை கொல்வதன் மூலம் அந்த நாட்டை உலுக்க முடியாது. அதற்குப் பதிலாக அந்த நாட்டினர் மனதில் அழுத்தமாக பதிந்துள்ள "பாதுகாப்பாக இருக்கிறோம்" என்ற உணர்வை அசைத்துப் பார்த்தால்தான் இஸ்ரேல் நடுங்கும் என்று திட்டமிட்டுத்தான் அந்த நாட்டின் Iron Dome பாதுகாப்பு வளையத்தையே சின்னாபின்னமாக்கியுள்ளனர். இதை யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.
சரி அது என்ன Iron Dome system?
இஸ்ரேல் நாட்டைச் சுற்றிலும் அதற்கு எதிரிகள்தான் அதிகம். எனவே எந்த வகையிலும் எதிரி நாட்டுப் படைகளோ, போராளிகளோ உள்ளே ஊடுறுவி விடாமல் தடுக்கும் வகையில் நாட்டின் எல்லைப் பகுதிகள் அனைத்திலும் குறுகிய தூர ஏவுகணை பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்துள்ளது இஸ்ரேல். ஏதாவது ராக்கெட் தாக்குதலோ, வெடிகுண்டுத் தாக்குதலோ அல்லது ஏவுகணைத் தாக்குதலோ, ஆளில்லா விமான ஊடுறுவலோ நடந்தால் உடனடியாக அதைத் தடுத்து தகர்க்கும் வல்லமை படைத்தவை இஸ்ரேலின் இந்த குறுகிய தூர தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள்.
தரையிலிருந்து வானில் 70 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்கைத் துல்லியமாக தாக்கி தகர்க்கும் திறமை படைத்தவை இந்த ஏவுகணைகள். மேலும் வானில் வரும் ஏவுகணை அல்லது எதிரி தாக்குதலை துல்லிகயமாக கண்டுபிடித்தும், அதைத் துரத்திச் சென்றும் தாக்கக் கூடியவை இவை என்பதால் இஸ்ரேல் நாடு முழுமையான பாதுகாப்புக்குள் இருப்பதாகவே இத்தனை காலமாக உலக நாடுகள் நம்பியிருந்தன.
உளவியல் ரீதியான தாக்குதல்
ஆனால் இந்த பாதுகாப்பு உணர்வை, இஸ்ரேலின் அதீத நம்பிக்கையை, அதன் தொழில்நுட்பத்தை, உளவுத்துறையை மொத்தமாக காலி செய்து விட்டன ஹமாஸ் ஏவிய 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள். இத்தனை ராக்கெட்டுகள் சர்வ சாதாரணமாக இஸ்ரேலுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவம் எதிர்பார்க்கவில்லை. எப்படி இந்த தவறு நடந்தது என்பது என்று மிகப் பெரிய அதிர்ச்சியில் அந்த நாடு உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் துரத்தி பாலஸ்தீனியர்கள் ஓடிய காட்சிகளைத்தான் உலகம் இதுவரை கண்டுள்ளது. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக, ஹமாஸ் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலியர்கள் ஓடிய காட்சி மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.
இந்த பாதுகாப்புத் திட்டத்தை 2011ம் ஆண்டுதான் உருவாக்கியது இஸ்ரேல். 2006ம் ஆண்டு லெபனான் நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ஆயிரக்கணக்கில் ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஹைபா பகுதியில் பெருமளவிலான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்தே Iron Dome system பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தியது இஸ்ரேல்.
ரபேல் உருவாக்கிய இரும்பு அரண்
ரபேல் நிறுவனம்தான் இந்த Iron Dome system பாதுகாப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள தமிர் ஏவுகணைகளை உருவாக்கியது. இந்த ஏவுகணையின் செயல்பாடு வியக்க வைப்பதாகவும். அதாவது எதிரி நாட்டிலிருந்து ஏதாவது ஏவுகணை அல்லது ராக்கெட் ஏவப்பட்டால் உடனே இதன் சென்சார் அதைக் கண்டறிந்து விடும். அதன் பிறகு ராக்கெட் எந்தத் திசை நோக்கி வருகிறது என்பதை கண்டறிந்து உடனடியாக அதை நோக்கி தானாகவே தமிர் ஏவுகணை செலுத்தப்பட்டு எதிரியின் ராக்கெட்டை வானிலையே தகர்த்து விடும்.
ஆனால் இந்த முறை இது சரிவர நடக்கவில்லை. அதாவது Iron Dome system திட்டத்தின் ஓட்டைகளை ஹமாஸ் கண்டுபிடித்து அதை வைத்து அதன் கண்ணில் மண்ணைத் தூவி தாக்குதலை நடத்தியுள்ளதாக சொல்கிறார்கள். அதாவது மொத்தமாக ராக்கெட்களை ஏவும்போது அதைக் கண்டுபிடித்து தகர்ப்பதில் Iron Dome system அமைப்பு திணறும் என்பதே அவர்கள் கண்டறிந்து அதை வைத்து ஏமாற்றி அடித்துள்ளனர்.
ஹமாஸின் Salvo rocket attack
இதை ஆங்கிலத்தில் Salvo rocket attack என்று சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு ராக்கெட்டாக விட்டால்தானே இஸ்ரேல் அதைத் தடுக்கும்.. மொத்தமாக ஆயிரக்கணக்கில் விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே ஹமாஸின் திட்டம். இதைத்தான் இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஹமாஸிடம் இவ்வளவு ஆயுதங்கள் இருக்காது என்று அது தப்புக் கணக்கு போட்டு விட்டது. இத்தனை ராக்கெட்களை ஹமாஸ் குவித்து வந்ததை இஸ்ரேலின் உலகப் புகழ் பெற்ற உளவு நிறுவனமான மொசார்ட்டும் கண்டுபிடிக்கத் தவறி விட்டது. மொத்தத்தில் இஸ்ரேல் பல்வேறு வகைகளில் ஹமாஸிடம் முதல் முறையாக பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹமாஸிடம் ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதாவது அவர்களே கண்டுபிடித்த தொழில்நுட்பம் இது. இதை நீண்ட காலமாகவே அவர்கள் உருவாக்கி வந்தனர். தற்போது அதில் அவர்கள் வெற்றி அடைந்துள்ளதையே இந்த அதிரடித் தாக்குதல் நிரூபிக்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்அவிவ் நகரிலும் ராக்கெட்களை வீசித் தாக்கும் அளவுக்கு அவர்கள் பலமடைந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்ரேலின் அதி நவீன தமிர் ஏவுகணையை விட மிக மிக செலவு குறைந்த ராக்கெட்டைத்தான் ஹமாஸ் பயன்படுத்தி தமிரை ஏமாற்றியுள்ளது. இதேபோன்ற ராக்கெட்டுகளை முன்பும் கூட ஹமாஸ் ஏவித் தாக்கியுள்ளது. அப்போது அதை வெற்றிகரமாக தடுத்து விட்டது இஸ்ரேல். ஆனால் இப்போது ஏன் தோல்வி அடைந்தது என்று தெரியவில்லை.
300 இஸ்ரேலியர்கள் பலி
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையில் தற்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது. ஹமாஸ் பகுதிகளை நோக்கி அது சரமாரியான தாக்குதலில் இறங்கியுள்ளது. அதேபோல லெபனான் நாட்டிலிருந்தும் ராக்கெட் வீச்சு நடத்தப்பட்டதால் அங்கும் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேல்.
இந்தப் போர் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. காரணம் இஸ்ரேல் யார் பேச்சுக்கும் கட்டுப்படாது. ஐ.நா.வையும் மதிக்காது, அமெரிக்காவையும் மதிக்காது. இப்படி யாரையும் மதிக்காத போக்கினால்தான் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி என்பது இல்லாத நிலை நிரந்தரமாகி விட்டது.