இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
மும்பை: இலவச வாக்குறுதிகள், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்டவை காரணமாகவே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை அறுவடை செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பலவீனமாக இருந்ததும் இன்னொரு முக்கியக் காரணமாகும்.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலை யாரும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும் என்று பலரும் கூறி வந்தனர். உத்தவ் தாக்கரேவிடமிருந்து கட்சி பறி போனதால் அவர் மீது மக்களுக்கு இருந்த அனுதாபம், இந்தியா கூட்டணியின் பலம், ராகுல் காந்தியின் முகம் என்று பல்வேறு காரணங்களால் பெருத்த நம்பிக்கையில் இந்தியா கூட்டணி தலைமை இருந்தது. ஆனால் அதிரடியான வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்து விட்டது பாஜக கூட்டணி.
பாஜக தனிப்பெரும் கட்சியாக நல்ல பலத்துடன் உருவெடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் வலுவான இடங்களைப் பெற்றுள்ளது. அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட 40க்கும் மேற்பட்ட இடங்களை அள்ளியுள்ளது. இப்படி ஒரு வெற்றியை பாஜக கூட்டணி பெறும் என்பதை காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்க்கவில்லை.
பாஜகவின் வெற்றிக்கு என்ன காரணம்?
ஆனால் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சில முக்கியக் காரணங்களை அரசியல் நோக்கர்கள் அடுக்குகிறார்கள். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மும்பை மட்டுமே நல்ல வளர்ச்சி அடைந்த நகரமாக இருக்கிறது. மும்பைக்கு வெளியே பெருமளவில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலையும் நடைபெறுகிறது. இதற்குக் காரணம் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை.
இதை சரி செய்வதாக மிகப் பெரிய வாக்குறுதியை பாஜக கொடுத்துள்ளது. அதாவது வறட்சி இல்லாத மகாராஷ்டிரா என்ற முழக்கத்தை அது முன்வைத்துள்ளது. இதைத்தான் தனது தேர்தல் வாக்குறுதியிலும் கூட முக்கியமாக அது தெரிவித்திருந்தது. குறிப்பாக விதர்பா பகுதிக்கு தனியாக திட்டங்களையும் அது அறிவித்துள்ளது. மரத்வாடா, விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இதற்கு நிரந்தரமான தீர்வு காணும் திட்டத்தையும் பாஜக முன்வைத்துள்ளது. அதில் முக்கியமானது, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு. இது விவசாயிகளைக் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கை கொடுத்த மகளிர் உரிமைத் திட்டம்
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இன்னொரு முக்கியமான அறிவிப்பு, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2100 உதவித் தொகை அளிக்கப்படும் என்பது. தமிழ்நாட்டில் திமுக அரசு அறிமுகப்படுத்தி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டமேதான் இது. இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை சரியாக அமல்படுத்தினால் அடுத்த தேர்தலிலும் கூட பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதுதவிர சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது, பழங்குடியினருக்கான நலத் திட்டங்கள், தொழில் திட்டங்கள், இளைஞர்களுக்கான திட்டங்கள் என்று தெளிவாக திட்டமிட்டு பாஜக செயல்பட்டதே அக்கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 13 இடங்களே கிடைத்தன. அதுவே 2019 லோக்சபா தேர்தலில் 28 இடங்களை பாஜக கூட்டணி அள்ளியிருந்தது. உ.பிக்கு அடுத்து அதிக எம்பி தொகுதிகள் உள்ள மாநிலம் மகாராஷ்டிராதான். இங்கு 48 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பலவீனமான காங்கிரஸ் கூட்டணி
மறுபக்கம் பலவீனமான காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி தவிர சிவசேனா உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் ஆகிய கட்சிகள் இருந்தன. இவர்கள் பிரச்சாரத்திலும் சொதப்பினர். வேட்பாளர் தேர்விலும் சொதப்பினர். தங்களுக்கு சாதகமாக நிலவி வந்த அனுதாப அலையைக் கூட இவர்களால் வாக்குகளாக மாற்ற முடியவில்லை. காரணம், பிரச்சாரத்தில் ஒரு விதமான மெத்தனப் போக்கு நிலவியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
ராகுல் காந்தியை மட்டுமே முழுமையாக நம்பினர். அதேசமயம், உத்தவ் தாக்கரேவின் பிரச்சாரத்தில் அனல் பறக்கவில்லை. சரத் பவாரும் முன்பு போல இல்லை என்பதால் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டது இந்தியா கூட்டணி.
இன்னொரு முக்கிய விஷயம், இந்துத்வாவின் அடையாளமாக பாஜக மற்றும் சிவசேனாவை மக்கள் பார்த்து வந்தனர். இதில் பாஜக தெளிவான பாதையில் போய்க் கொண்டிருப்பதால் பாஜகவினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேசமயம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு அதிக நம்பிக்கை வந்ததால்தான் அவரது கட்சியை உண்மையான சிவசேனாவாக மக்களே வாக்களித்து அங்கீகரித்து விட்டதாக கருதப்படுகிறது. உத்தவ் தாக்கரேவின் தடுமாற்றமான செயல்பாடுகளால் அவரை மக்கள் நிராகரித்துள்ளனர்.
ஜாதி அரசியல்
பாஜகவின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம், ஜாதி ரீதியான வாக்குகளை சரியான முறையில் தன் பக்கம் திருப்பியது. குறிப்பாக பிற பிற்பட்ட வகுப்பினரை முழுமையாக தன் பக்கம் ஈர்த்துள்ளது பாஜக. ஒவ்வொரு ஜாதி வாக்கையும் இழுக்க என்ன தேவையோ அதை பாஜக செய்துள்ளது. மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி விடும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடும் என்ற காங்கிரஸின் பிரச்சாரம் மகாராஷ்டிராவில் எடுபடாமல் போய் விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் வெறும் 16 சீட்டுகளே கிடைத்துள்ளன என்பது கொடுமையானது. கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி கரைந்து போய் விட்டது.
இப்படி பல்வேறு வகையிலும் பார்த்துப் பார்த்து சரியான கோணத்தில் திட்டமிட்டு செயல்பட்டதால்தான் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முடிந்துள்ளது. தெளிவில்லாத செயல்பாடுகளால் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்