இப்ப மட்டுமல்ல, 2029 லும் நரேந்திர மோடி தான் பிரதமர்.. அடித்துச் சொல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா

Aadmika
Aug 05, 2024,06:52 PM IST

டில்லி : 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2029 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடித்துக் கூறி உள்ளார்.


டில்லியில் நியாய் சேது குடிநீர் விநியோக திட்டத்தை துவக்கி வைத்த பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறகையில், 2029ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராவார். இந்தியா கூட்டணி அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும்.




எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும், நான் உறுதியாக சொல்கிறேன் 2029ம் ஆண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சிக்கு வரும். மோடி தான் பிரதமராவார். கடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரசை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. 


இந்த அரசு நிலையாக இருக்கக் கூடாது. அரசு விரைவில் கவிழ்ந்து விடும். இது நீடிக்காது என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்வது மட்டுமல்ல அடுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது. அதனால் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர எதிர்க்கட்சிகள் தயாராக இருந்து  கொள்ளட்டும். முதலில் எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளட்டும் என்றார் அமித்ஷா.


பிறகு நியாய் சேது திட்டம் குறித்து பேசிய அமித்ஷா, 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 125 ஏக்கரில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம். ஸ்மார்ட் சிட்டிகள் மீது பிரதமர் மோடி கவனம் செலுத்துவதை காட்டுகிறது. இந்த பட்டியலில் முதலில் இருப்பது சண்டிகர். அதனால் தான் இங்கு ஒரு லட்சம் கோடி முதலீட்டில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 


சுத்தமான குடிநீர், அதனால் ஏற்படும் நோய்களை குறைப்பதற்காக நாட்டில் உள்ள  மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்காக துவங்கப்படும் இந்த திட்டம் மோடி, தன்னுடைய 3 முறை பிரதமர் காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என்றார்.