நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி.. 400 தொகுதிகள் உறுதி.. அமைச்சர் அமித்ஷா

Su.tha Arivalagan
Feb 10, 2024,05:16 PM IST

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 தொகுதிகளும் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதைப் போலவே இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியுள்ளா்.  மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது பாஜகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 370 இடங்களில் வெற்றி கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 தொகுதிகள் கிடைக்கும். 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும். மிகப் பெரிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. காங்கிரஸ் நிரந்தரமாக எதிர்க்கட்சியாகவே இருக்கும் என்று பரபரப்பாக பேசியிருந்தார்.


இந்த நிலையில் இன்று அமித்ஷாவும் அதே போல பேசியுள்ளார். இதுகுறித்து ET NOW Global Business Summit 2024 கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசும்போது கூறியதாவது:


3வது முறையாக பாஜக ஆட்சி




370வது சட்டப் பிரிவை நாங்கள் ஏற்கனவே நீக்கியுள்ளோம். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. மக்கள் பாஜகவை மீண்டும் ஆசிர்வதிப்பார்கள். பாஜக 370 இடங்களில் வெல்லும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும். 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைக்கும்.


தேர்தல் முடிவுகள் தொடர்பாக எந்த சஸ்பென்ஸும் இல்லை. காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரப் போகின்றன. அது அவர்களுக்கே தெரியும்.


கூட்டணி விரிவடையும்




ராஷ்டிரிய லோக்தளம், சிரோமணி அகாலிதளம் என யார் வந்தாலும் நாங்கள் தடுக்கப் போவதில்லை. குடும்பக் கட்டுப்பாட்டுக்கு நாங்கள் ஆதரவானவர்கள்தான். ஆனால் அரசியலில் அதை நாங்கள் கடைப்பிடிக்க மாட்டோம். பேச்சுக்கள் நடக்கின்றன. முடிவு எடுக்கப்படவில்லை.


2024 தேர்தல் தேசிய ஜனநாயகக்  கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக இருக்காது. மாறாக வளர்ச்சிக்கும், வளர்ச்சி குறித்து வெற்று முழக்கங்களை முழங்குவோருக்கும் இடையிலான போட்டியாகவே இது இருக்கும்.


1947ம் ஆண்டு நாடு பிரிவினையைச் சந்திக்கக் காரணமான கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு பாரதத்தை இணைக்கப் போவதாக ராகுல் காந்தி யாத்திரை நடத்துவதற்கு எந்த உரிமையும், அருகதையும் இல்லை.


பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை




2014ம் ஆண்டு பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல்தான். வெளிநாட்டு முதலீடுகள் வரவே இல்லை. அப்போதே அதுகுறித்த வெள்ளை அறிக்கையைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் உலகம் அதை வேறு மாதிரியாகத்தான் பார்த்திருக்கும். 10 வருடங்களுக்குப் பிறகு  இப்போது நமது பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு முதலீடுகள் அபரிமிதமாக வந்து கொண்டுள்ளன. ஒரு ஊழல் கூட நடக்கவில்லை. எனவே இப்போது வெள்ளை அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்கிறோம்.


500-550 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வந்த ராமர் கோவில் தற்போது அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் வந்து விட்டது. அரசியல் காரணங்களுக்காக இந்தக் கோவிலை தாமதப்படுத்தி வந்தனர். அதை நாங்கள் செய்து முடித்துள்ளோம்.


குடியரிமை திருத்த சட்டம்




2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அமல்படுத்தப்படும். நமது முஸ்லீம் சகோதரர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக தவறான தகவல்களே தரப்பட்டுள்ளன. ஆனால் இது நிச்சயம் அவர்களுக்கு எதிரானதல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தாயகம் திரும்பிய இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கவே இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. யாரிடமிருந்தும் இந்தியக் குடியுரிமையை பறிக்க வந்த சட்டம் அல்ல இது.


பொது சிவில் சட்டம் என்பது நாங்கள் சொன்னதல்ல. மறைந்த ஜவஹர்லால் நேரு சொன்னதுதான் இது. ஆனால் காங்கிரஸ், இதை அரசியல் நோக்கத்திற்காக கிடப்பில் போட்டு விட்டது. சமூக மாற்றத்துக்கு பொது சிவில் சட்டம் அவசியம்.  அனைத்து மட்டங்களிலும் விவாதித்து இது கொண்டு வரப்படும். ஒரு மதச் சார்பற்ற நாடு பல  சட்டங்களைக் கொண்டிருக்க முடியாது என்றார் அமித் ஷா.