புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு.. அமைச்சர் அமித்ஷா அளித்த விளக்கம்!

Meenakshi
Jul 01, 2024,05:35 PM IST

டெல்லி: புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.


ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை நேற்று நள்ளிரவு வரை அமலில் இருந்து வந்தன. தற்பொழுது இந்த சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டமும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷிய சட்டமும், இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டத்தையும் உருவாக்கியது மத்திய அரசு. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.




நள்ளிரவில் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் கீழ் கால் மணி நேரத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதாவது,  டெல்லி ரயில் நிலைய நடை மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்ததாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 


வழக்குத் தொடரப்பட்டவர் பெயர், பங்கஜ் குமார். பீகாரைச் சேர்ந்த இவர் சாலையோர வியாபாரி ஆவார். இவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் டெல்லி போலீசார். வழக்கு பதிவு செய்யப்பட்ட பங்கஜ் குமாருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குவாலியரில்தான் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் அல்ல. குவாலியரில் பதிவான வழக்கு ஒரு திருட்டு வழக்காகும். டெல்லி வழக்கில் பழைய சட்டத்தில் இருந்த நடைமுறைகளே கையாளப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் பிரிவுகள் ஏற்கனவே இருந்தவைதான் என்று விளக்கம் அளித்துள்ளார் அமித் ஷா.