கரீபியக் கடலில் விழுந்த விமானம்.. 2 மகள்களுடன் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் மரணம்
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டியன் ஆலிவர், தனது இரு மகள்களுடன் சிறிய ரக விமானத்தில் பயணித்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகி கரீபியக் கடலில் விழுந்தது. இதில் விமானி உள்ளிட்ட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்தவரான கிறிஸ்டியன் ஆலிவர், ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர். ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து தி குட்ஜெர்மன் படத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் காமெடி படமான ஸ்பீட் ரேசர், இவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது.
இவருக்குச் சொந்தமான ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானத்தில் பயணித்தபோதுதான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதும், டைவர்களும், மீனவர்களும் உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். கடலோரக் காவல் படையின் உதவியும் கோரப்பட்டது. ஆனால் நான்கு பேரின் உடல்களைத்தான் மீட்க முடிந்தது.
ஆலிவருக்கு 51 வயதாகிறது. மூத்த மகள் ஆனிக் 12 வயது, இளைய மகள் மடிடாவுக்கு 10 வயதாகிறது. விமாத்தை செலுத்தியவரின் பெயர் ராபர்ட் சாக்ஸ். கிரெனடைன்ஸ் தீவில் உள்ள பெகுயா என்ற இடத்திலிருந்து செயின்ட் லூசியாவுக்கு இந்த விமானம் கிளம்பியபோதுதான் விபத்துக்குள்ளானது.
விடுமுறைக்காக தனது மகள்களுடன் அங்கு முகாமிட்டிருந்தார் ஆலிவர். சந்தோஷத்திற்காக வந்த இடத்திலேயே அவர் குடும்த்தோடு மரணத்தைத் தழுவியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.